இந்தியா

மக்களவையில் நிறைவேறியது ஆசிரியர் பணி இடஒதுக்கீடு மசோதா

2nd Jul 2019 02:55 AM

ADVERTISEMENT


மத்திய கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு முறையை கொண்டு வருவது தொடர்பான சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது. 
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் துறைகள் ரீதியாக அல்லாமல் ஒரே அமைப்பாக இடஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது. 
ஆசிரியர்கள் பணி இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு மாற்றாக இந்த மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்கள் பணி இடஒதுக்கீடு) மசோதா 2019 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
இந்த மசோதா, 41 மத்திய பல்கலைக்கழகங்களில் ஏற்கெனவே காலியாக உள்ள 8,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வகை செய்கிறது. 
மசோதா நிறைவேற்றத்தின்போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங்க் போக்ரியால் கூறியதாவது: 
பல்வேறு தரப்பு மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும் மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்கள் பணி இடஒதுக்கீடு) மசோதா, கல்வித் துறையின் சீர்திருத்தத்துக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கும். 
நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் குடிமகனின் நலனுக்காகவும் பிரதமர் நரேந்திர மோடி அரசு உறுதி பூண்டுள்ளதை இந்த மசோதா வெளிக்காட்டுகிறது. 
ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான நியமனங்களில் பட்டியலின, பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர்களுக்கும் இடஒதுக்கீடு அளிக்க இந்த மசோதா வகை செய்கிறது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழைய இடஒதுக்கீட்டு முறையையே அமல்படுத்தக் கூறுவதன் மூலம், பின்தங்கிய சமூகத்தினரின் நலனில் எதிர்க்கட்சியினர் எவ்வாறு அக்கறையின்றி இருக்கின்றனர் என்பது தெளிவாகிறது என்று அமைச்சர் ரமேஷ் நிஷாங்க் போக்ரியால் கூறினார். 
முன்னதாக, விரிவான ஆய்வுக்காக இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு பரிந்துரைக்குமாறு காங்கிரஸ் மக்களவை கட்சித் தலைவர் அதீர் ரஞ்சன் செளதரி கொண்டுவந்த தீர்மானம் அவையில் நிராகரிக்கப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT