இந்தியா

நாடு முழுவதும் ஆக. 12 முதல் மாதிரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு

2nd Jul 2019 01:24 AM

ADVERTISEMENT


நாடு முழுவதும் ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 30 வரை மாதிரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக கணக்கெடுப்பு ஆணையரும், பதிவாளருமான விவேக் ஜோஷி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கடந்த 1948-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின்படி, 2021-ஆம் ஆண்டுக்கான மாதிரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நாடு முழுவதுமுள்ள அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மாதிரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஏதேனும் இரண்டு மாதங்களில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய வீடுகளின் பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது. 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை வீடுகள்தோறும் சென்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பின்னர் 2021-ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் 5-ஆம் தேதி வரை சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வீடுகள்தோறும் சென்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. சரிபார்க்கும் பணிகள் 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் 5-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளன.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் நாடு முழுவதும் சுமார் 33 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதில் சிறப்புவாய்ந்த அம்சமாக, பணியாளர்களின் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள செயலியின் மூலமே மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT