இந்தியா

நாடு கடத்த எதிர்ப்பு: மல்லையா மனு மீது இன்று விசாரணை

2nd Jul 2019 02:58 AM

ADVERTISEMENT


இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு மீது பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை  (ஜூலை 2) விசாரணை நடைபெறவுள்ளது.
இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன்வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு மல்லையா கடந்த 2016-ஆம் ஆண்டு தப்பியோடி விட்டார். அவரை நாடு கடத்த உத்தரவிடக்கோரி, லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்த வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்த தடையுமில்லை என்று தெரிவித்தது.
இதையடுத்து, மல்லையாவை நாடு கடத்துவதற்கான உத்தரவில், பிரிட்டன் உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவீத் கையெழுத்திட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மல்லையா தாக்கல் செய்த மனு ஏற்கெனவே ஒரு முறை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஏப்ரலில் அவர் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஜார்ஜ் லெக்காட், ஆண்ட்ரூ போப்பிள்வெல் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. நாள் முழுவதும் நடைபெறும் இந்த விசாரணையின்போது, இந்திய அரசு மற்றும் மல்லையா தரப்பு வழக்குரைஞர்கள் கூடுதல் வாதங்களை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையைத் தொடர்ந்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மல்லையாவின் மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில், அந்த தீர்ப்பு வெளியான 28 நாள்களுக்குள் அவர் நாடு கடத்தப்பட வேண்டும். அதேசமயம், அவரது மனு ஏற்கப்பட்டால், உயர்நீதிமன்றத்தில் விரிவாக விசாரணை நடைபெறும். 
தற்போதைய சூழலில், மல்லையாவின் வழக்கு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT