மாயாவதி குறித்த சர்ச்சை கருத்து: வருத்தம் தெரிவித்தார் பாஜக எம்எல்ஏ

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை  திருநங்கைகளுடன் ஒப்பிட்டு பேசியதற்காக உத்தரப் பிரதேச மாநில பாஜக பெண் எம்எல்ஏ சாதனா சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை  திருநங்கைகளுடன் ஒப்பிட்டு பேசியதற்காக உத்தரப் பிரதேச மாநில பாஜக பெண் எம்எல்ஏ சாதனா சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் 80 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜவாதி கட்சியும் முடிவு செய்துள்ளன. இதை உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ சாதனா சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். முகுல்சராய் தொகுதி எம்எல்ஏவான அவர், சந்தௌலியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், "அதிகாரத்துக்காக தனது கண்ணியத்தை விற்றுவிட்டு, தன்னை அவமரியாதை செய்தவர்களுடன் மாயாவதி கூட்டணி சேர்ந்துள்ளார். பெண் சமூகத்துக்கு அவர் ஒரு கறை' என்றார். மேலும், திருநங்கைகளுடன் மாயாவதியை ஒப்பிட்டு சில கருத்தை அவர் வெளியிட்டார்.
அவரது இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சரும், இந்திய குடியரசு கட்சித் தலைவருமான ராம்தாஸ் அதாவலே கண்டனம் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் எஸ்.சி. மிஸ்ரா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், பகுஜன் சமாஜ்-சமாஜவாதி கூட்டணி அமைத்துவிட்டதால், சாதனா சிங்குக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், "விரக்தியின் வெளிப்பாடே, சாதனா சிங்கின் கருத்து; பெண் சமூகத்தினர் அனைவரையும் அவரது பேச்சு, அவமதித்து விட்டது' என்றார்.
நோட்டீஸ் அனுப்ப மகளிர் ஆணையம் முடிவு: இதனிடையே, மாயாவதியை பாஜக எம்எல்ஏ சாதனா சிங் கடுமையாக விமர்சித்திருக்கும் விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா கூறுகையில், "சாதனா சிங்குக்கு விளக்கம் கேட்டு திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்ப தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்துள்ளது' என்றார்.

இந்நிலையில், மாயாவதி குறித்த கருத்துக்காக பாஜக எம்எல்ஏ சாதனா சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com