மகரவிளக்கு பூஜை நிறைவு: சபரிமலை கோயில் நடையடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை கோயில் நடையடைக்கப்பட்டது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை கோயில் நடையடைக்கப்பட்டது. 
சுவாமி ஐயப்பன் சந்நிதானத்தில் மாலையில் நடைபெற்ற பூஜையில் பாரம்பரிய வழக்கப்படி பந்தளம் அரச குடும்ப பிரதிநிதி பி.ராகவ வர்ம ராஜா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் மூலவருக்கு பஸ்மாபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து, "ஹரிவராஸனம்' பாடப்பட்டு கோயில் நடை அடைக்கப்பட்டது. 
மிகுந்த பரபரப்பான சூழலுக்கிடையே மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை நிறைவடைந்துள்ளன. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பளித்தது. எனினும், சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்கு உள்பட்ட பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்ற பாரம்பரியம் தொடர்ந்து காக்கப்பட வேண்டும் என்று பரவலாக கருத்துகள் எழுந்தன. எனினும், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கேரள அரசு இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளம் உள்பட நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
எனினும் போலீஸார் பாதுகாப்புடன் 2 பெண்கள் ரகசியமாக சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதானப் பகுதிக்குள் நுழைந்து தரிசனம் செய்தனர். அத்துடன், சில திருநங்கைகளும் தரிசனம் செய்தனர்.
இத்தகைய பல்வேறு பரபரப்புச் சூழல்களுக்கிடையே மண்டல மற்றும் மகரவிளக்குப் பூஜைகள் நிறைவடைந்து சபரிமலை சந்நிதானத்தின் நடையடைக்கப்பட்டது.
இனி மாசி மாதப் பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் பிப்.13-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக பாஜக உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் போராட்டம் முழுத் தோல்வி அடைந்ததாக என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்தார். அதே சமயத்தில், பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, "சபரிமலையில் பாரம்பரிய வழக்கங்கள் பாதுகாக்கப்பட சங் பரிவார் அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் வெற்றி அளித்தன' என்றார்.
இவ்விவகாரம் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், "போலீஸார் உதவியுடன் மக்களின் மத நம்பிக்கைகளைத் தகர்க்கும் மாநில அரசின் செயல்பாடு வெட்கத்துக்குறியது' என்றார்.
துரதிருஷ்டவசமானது: சபரிமலையில் அனைத்து வயது பெண்கள் அனுமதிக்கப்பட்ட விவகாரத்தில் நிகழும் சம்பவங்கள் துரதிருஷ்டவசமானவை என்று மத குருவான மாதா அமிர்தானந்தமயி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com