சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல் வெட்கக்கேடானது: பிரதமர் மோடி

சபரிமலை விவகாரத்தில் கேரளத்தை ஆளும் இடது சாரி கூட்டணி அரசின் செயல்கள் வெட்கக்கேடானவை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் வழிபட்ட பிரதமர் மோடி, மாநில ஆளுநர் பி.சதாசிவம்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் வழிபட்ட பிரதமர் மோடி, மாநில ஆளுநர் பி.சதாசிவம்.


சபரிமலை விவகாரத்தில் கேரளத்தை ஆளும் இடது சாரி கூட்டணி அரசின் செயல்கள் வெட்கக்கேடானவை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்துவதற்காக கேரள அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விமர்சித்து பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை கேரள மாநிலத்துக்குச் சென்றிருந்தார். கொல்லம் நெடுஞ்சாலைக்கான அடிக்கல்லை நாட்டிய பிறகு, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இதுவரை எந்த அரசும், எந்த கட்சியும் செய்யாத செயல்களை சபரிமலை விவகாரத்தில் இடதுசாரி கூட்டணி அரசு செய்து விட்டது. இது வெட்கக்கேடான செயல். இந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள் என்று நமக்கு தெரியும். ஆனால் இந்த அளவுக்கு வெறுப்புணர்வை காட்டுவார்கள் என்று யாரும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள் என்று தாக்கிப் பேசினார்.
காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு: 
சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதாக மோடி குற்றம்சாட்டினார். கேரளத்தை ஆட்சி செய்த ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இடதுசாரி கூட்டணி அரசுகள், மாநிலத்தை இனக்கலவரம் மற்றும் ஊழலுக்கான இடமாக மாற்றியுள்ளன. சபரிமலை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒரு மாதிரியாகவும், கேரளத்தில் ஒரு மாதிரியாகவும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கருத்து தெரிவித்து வருகிறது. சபரிமலை விவகாரத்தில் கொண்டுள்ள இரட்டை நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் உள்ள கட்சிகளும் விளக்கமளிக்க வேண்டும் என்று சவால் விடுகிறேன். சபரிமலை விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு எப்போதும் ஒரே மாதிரியாகதான்உள்ளது. கட்சியின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் எந்த வேற்றுமையும் இருக்காது. கேரளத்தின் கலாசாரத்தை காப்பாற்ற நினைக்கும் ஒரே கட்சி பாஜகதான். 
காங்கிரஸும், இடதுசாரி கூட்டணி அரசும் பாலின நீதி குறித்து பேசுகிறார்கள். ஆனால் அவர்களது செயல் வேறுமாதிரியாக உள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி என்று வேறு வேறு பெயரில் கட்சி வைத்துள்ளார்களே தவிர கேரளத்தின் கலாசாரத்தை அழிப்பதில் ஒரே மாதிரிதான் செயல்படுகிறார்கள். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அவர்கள் இருவரும் என்று குற்றம்சாட்டினார்.
முத்தலாக் முறை முஸ்லிம் இன பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி. பல இஸ்லாமிய நாடுகளில் அந்த முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காகதான், கம்யூனிஸ்டும், காங்கிரஸும் இதற்கு ஆதரவளிக்கின்றன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இருக்கும் இந்திய முஸ்லிம் லீக் யூனியன் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எந்த சமூகம், இனத்தில் பிறந்திருந்தாலும் அனைவருக்கும் சமமாக அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சமூக நீதிக்காக நாங்கள் உழைக்கிறோம். ஆனால் ஐக்கிய ஜனநாயக முன்னணிஅதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. 
தற்போதைய நிலைமையில் பாஜகவை நினைத்து அவர்கள் சிரிக்கலாம். ஆனால் எனக்கு பாஜக தொண்டர்கள் மீது நம்பிக்கை உள்ளது. திரிபுராவில் கம்யூனிஸ்டை வீழ்த்தி வெற்றி பெற்றவாறு, கேரளத்திலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று மோடி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பதிலடி: பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அளித்துள்ள பதிலடியில், இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பதாகதான் பிரதமர் பதவி பிரமாணம் செய்து உறுதிமொழி ஏற்றாரே தவிர, ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுதிமொழியை அல்ல. மேலும், கலாசாரம், வரலாறு குறித்து பாடம் எடுப்பதை மோடி நிறுத்தி கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களே ஹிட்லரை போன்று சர்வாதிகார கலாசாரத்தை பின்பற்றுகிறார்கள். அதனால் கேரளத்தில் தேவையற்ற வெறுப்புணர்வை பரப்ப முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com