கேரளம்: கிறிஸ்தவ மடத்தில் இருந்து வெளியேற 4 கன்னியாஸ்திரீகளுக்கு நெருக்கடி

கேரளத்தில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கிய பாதிரியார் பிராங்க்கோ முளக்கல்லுக்கு எதிராக போராடிய 5 கன்னியாஸ்திரீகளில் 4 பேருக்கு, அவர்கள் தங்கியுள்ள


கேரளத்தில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கிய பாதிரியார் பிராங்க்கோ முளக்கல்லுக்கு எதிராக போராடிய 5 கன்னியாஸ்திரீகளில் 4 பேருக்கு, அவர்கள் தங்கியுள்ள கிறிஸ்தவ மடத்தில் (கான்வென்ட்) இருந்து வெளியேறும்படி நெருக்கடி அளிக்கப்பட்டு வருகிறது.
கோட்டயம் மாவட்டம், குரவியலங்காட்டில் உள்ள கிறிஸ்தவ மடத்தில் (கான்வென்ட்) கன்னியாஸ்திரீகள் ஆல்பி, அனுபமா, ஜோசஃபின், அன்சிட்டா ஆகிய 4 பேரும் தங்கியுள்ளனர். ரோமன் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த பாதிரியார் பிராங்க்கோ முளக்கல்லுக்கு எதிராக இவர்கள் 4 பேரும், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இந்த 4 பேரும், இவர்களுக்கு ஆதரவாக கன்னியாஸ்திரீ நீனா ரோஸும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக கேரளத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, பாதிரியார் பிராங்க்கோ முளக்கல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அக்டோபர் மாதம் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அவரிடம் இருக்கும் பொறுப்புகள் அனைத்தும் தற்காலிகமாக பறிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கன்னியாஸ்திரீகள் ஆல்பி, அனுபமா, ஜோசஃபின், அன்சிட்டா ஆகிய 4 பேருக்கும் ஜலந்தர் மறை மாவட்டத்தின் கீழ் வரும் மிஷனரீஸ் ஆப் ஜீசஸ் அமைப்பிடம் இருந்து உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட இடமாறுதல் உத்தரவுகளுக்கேற்ப வேறு கிறிஸ்தவ மடத்துக்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த கன்னியாஸ்திரீகள் 4 பேரும், தற்போது தங்கியுள்ள மடத்தில் இருந்து வெளியேறும் திட்டமில்லை எனத் தெரிவித்துள்ளனர். அதில் ஒரு கன்னியாஸ்திரீ கூறுகையில், பாதிரியாருக்கு எதிராகப் புகார் கொடுத்துள்ள எங்கள் 4 பேருக்குள்ளும் பிளவு ஏற்படுத்தி, தனித்தனியே வேறு வேறு மடத்துக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காகவே, இங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
அதே மடத்தில்தான் கன்னியாஸ்திரீ நீனா ரோஸும் தங்கியுள்ளார். ஆனால் அவருக்கு அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com