சனிக்கிழமை 20 ஜூலை 2019

தமிழகத்தில் மேலும் ஒரு மத்தியப் பல்கலை.: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

DIN | Published: 17th January 2019 01:11 AM


தமிழகத்தில் மேலும் ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே 2 மத்தியப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.
சென்னை செம்மஞ்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகம் 2008-ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. அதுபோல திருவாரூர் மாவட்டம், நீலாகுடியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகம் கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, ரூ.3,600 கோடி மதிப்பில் 13 புதிய மத்தியப் பல்கலைக்கழகங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அடுத்த 36 மாதங்களுக்குள், தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான், கேரளம், ஒடிஸா, கர்நாடகம், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், ஹரியாணா, குஜராத், பிகார் ஆகிய மாநிலங்களில் இந்தப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படவுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் மட்டும் 2 பல்கலைக்கழகங்களும், மற்ற மாநிலங்களில் தலா ஒரு பல்கலைக்கழகமும் அமையவுள்ளது.
இத்தகவலை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கிடையே, எக்ஸிம் வங்கிக்கு கூடுதல் மூலதனமாக ரூ.6,000 கோடி செலுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இதுதொடர்பாக பியூஷ் கோயல் மேலும் கூறியதாவது:
ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் நிதி, தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் துறைகளில் உதவி செய்யும் நோக்கத்துடன் எக்ஸிம் வங்கி தொடங்கப்பட்டது.
கடந்த நிதியாண்டில் எக்ஸிம் வங்கிக்கு ரூ.500 கோடி கூடுதல் மூலதனத்தை மத்திய அரசு அளித்தது. இந்த ஆண்டில் ரூ.6,000 கோடி கூடுதல் மூலதனம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது, வர்த்தகத்தை விரிவுப்படுத்த உதவும்.
மேலும், எக்ஸிம் நிறுவனத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்ட மூலதனத் தொகையான ரூ.10,000 கோடியை ரூ.20,000 கோடியாக உயர்த்தவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்றார் பியூஷ் கோயல்.
சுரங்கப் பாதுகாப்புக்காக ஆஸ்திரேலிய அரசுடன், இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்வதற்காக மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், சுரங்கப் பாதுகாப்புக்கான பொது இயக்குநரகம் (டிஜிஎம்எஸ்), மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கும்,
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்கப் பாதுகாப்பு ஆய்வு மையத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு உடனடியாக அமலுக்கு வரும். 3 ஆண்டுகளுக்கு அந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சுரங்க விபத்து விகிதம் ஆஸ்திரேலியாவில் மிக மிக குறைவாகவுள்ளது. சுரங்க விபத்துகளைத் தவிர்ப்பதற்காக சிறப்பான திட்டங்களை ஆஸ்திரேலிய அரசு நிறுவனம் முன்னெடுப்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஷீலா தீட்சித் மறைவு: பிரதமர் மோடி, ராகுல், கேஜரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
தாயால் கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்டு, நாயால் மீட்கப்பட்ட பச்சிளம் சிசு
முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி
தில்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார்
தேசிய உரத்தொழிற்சாலையில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!