வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

கர்நாடகத்தில் கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

DIN | Published: 17th January 2019 02:56 AM


கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சித்து வருவதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகத்தில் ஆட்சிப்பொறுப்பேற்று 7 மாதங்களை நிறைவு செய்துள்ள முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தற்போது சிக்கலான அரசியல் சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக சுயேச்சை எம்எல்ஏக்களான ஆர்.சங்கர் (ரானேபென்னூர் தொகுதி), எச்.நாகேஷ் (முல்பாகல் தொகுதி) ஆகியோர் அறிவித்துள்ளனர். 
இதனால் ஆட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றாலும், இதைத் தொடர்ந்து காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த ஒருசில எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜக-வில் சேரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதால், கர்நாடக அரசியலில் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 
பாஜகவின் 104 எம்.எல்.ஏ.க்கள் ஹரியாணா குருகிராம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த 2 நாள்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு, அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், மாநில பாஜக தலைவருமான எடியூரப்பாவும் தங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, உமேஷ் ஜாதவ் ஆகிய இருவரும் காங்கிரஸ் தலைவர்களின் தொடர்புக்கு சிக்காமல் இருந்து வருவதும் கூட்டணி ஆட்சியைப் பதற்றமடைய செய்துள்ளது.
இதனிடையே புதன்கிழமை பெங்களூரு வந்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபாலைச் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய பிறகு, செய்தியாளர்களிடம் தினேஷ் குண்டுராவ் கூறியது:
கர்நாடகத்தில் திடீர் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதற்கு பாஜகவே காரணம். அரசியல் நன்னெறி, ஒழுக்கங்களை காற்றில் பறக்கவிட்டுள்ள பாஜக, ஆட்சியைக் கவிழ்க்க பகிரங்க முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோர் தலைமையில் பாஜக, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான கட்சியாக மாறிவிட்டது. காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள், அரசியல் எதிரிகளை மிரட்டுவதற்கு அரசு இயந்திரத்தை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. 
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். யாரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவுக்கு செல்லமாட்டார்கள். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எங்களோடு ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
தும்கூரு ஊரகத் தொகுதி மஜத எம்எல்ஏ கெளரிசங்கரை பாஜக தலைவர்கள் தொடர்புகொண்டு, கட்சித் தாவி பாஜகவுக்கு வந்தால் ரூ.60 கோடி கொடுக்கத் தயாராக இருப்பதாக பேரம் பேசியுள்ளது பகிரங்கமாகியுள்ளது. ஆட்சியைக் கவிழ்க்க பாஜக மேற்கொண்ட மற்றொரு முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. 
ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதற்கு குதிரைபேரத்தில் ஈடுபடுவது சரியா? பாஜக, ஜனநாயகத்துக்கு எதிரான செயல்படுகளில் ஈடுபட்டுள்ளது. ஆட்சியைக் கவிழ்க்க மேற்கொண்ட முயற்சியை பாஜகவினர் ஒத்துக் கொண்டு, இதுபோன்ற முயற்சியில் மீண்டுமொருமுறை ஈடுபடவேண்டாம் என்று அக்கட்சிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். 
தேசிய கட்சியாக இருந்துகொண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சிக்கு சரியல்ல. பாஜகவினர் ஏற்கெனவே 18 மாநிலங்களில் ஆட்சி நடத்தி வருகிறார்கள். கர்நாடகத்திலும் ஆட்சி நடத்த பாஜக குதிரைபேர முறையை கையாள்வது சரியா? மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாஜக ஒத்துழைக்க வேண்டும். 
ஆட்சியைக் கவிழ்க்க மேற்கொண்டிருக்கும் முயற்சியின் மூலம் மக்களுக்கு துரோகம் செய்ய முற்பட்டுள்ளனர் என்றார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

முதல்கட்டத் தேர்தலில் 10 தொகுதிகளில் காங்கிரஸ்-மஜத கூட்டணி வெற்றி பெறும்
சிறுபான்மையினரின் வாக்குகளை கவரவே வயநாட்டில் ராகுல் போட்டி: பிரதமர் நரேந்திர மோடி
நேரு காலத்தில் இருந்தே வறுமையை ஒழிப்பதாக காங்கிரஸ் கூறி வருகிறது: நிதின் கட்கரி
இது நாட்டின் கடைசித் தேர்தல் அல்ல: சரத் பவார்
மோடி மீண்டும் பிரதமராவது உறுதி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்