சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை?

DIN | Published: 17th January 2019 01:09 AM


உலக வங்கி தலைவர் பதவிக்கு பெப்ஸி கோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) இந்திரா நூயி(63) பெயரை பரிந்துரைக்க அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. 
உலக வங்கி தலைவராக உள்ள ஜிம் யாங் கிம், வரும் பிப்ரவரி மாதம் தனது பதவியில் இருந்து விலக இருப்பதாக அண்மையில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்குமாறு, உலக வங்கியில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு அந்த வங்கியின் இயக்குநர்கள் குழு அறிக்கை வெளியிட்டது. 
அதையடுத்து தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்வதற்கு யாரை தேர்ந்தெடுப்பது என்று அமெரிக்கா தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
உலக வங்கி தலைவர் பதவிக்கு முன்னிறுத்துபவர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில், நிதித்துறை செயலர் ஸ்டீவன் நுச்சின், வெள்ளை மாளிகையின் தற்காலிக தலைவர் மிக் முல்வானே மற்றும் அதிபர் ட்ரம்பின் மூத்த மகளான இவாங்கா ட்ரம்ப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தலைவர் பதவிக்கு முன்னிறுத்துபவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில், பெப்ஸிகோ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ இந்திரா நூயியை முன்னிறுத்த இவாங்கா ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
மிகப்பெரிய பொருளாதார நிர்வாகத்தின் தலைமைப்பொறுப்புக்கு பரிந்துரைப்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இவாங்கா இடம் பெற்றுள்ளது பொருளாதார நிபுணர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த நாளிதழில் கூறப்பட்டிருந்தது.
சென்னையைச் சேர்ந்தவரான இந்திரா நூயி, சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்தவர். அமெரிக்காவில் பணியில் சேர்ந்த பி றகு அந்நாட்டு குடியுரிமை பெற்று, அங்கேயே வசித்து வருகிறார். 
உலகின் இரண்டாவது பெரிய உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பு நிறுவனமான பெப்ஸி கோ நிறுவனத்தில் 12 ஆண்டுகளாக சிஇஓவாக பணியாற்றிய அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த பதவியில் இருந்து விலகினார்.
 

More from the section

விமானத்தைக் கடத்துவதாக ஏர் இந்தியாவுக்கு மிரட்டல்; விமான நிலையங்களில் உஷார் நிலை
சிதம்பர ரகசியம்: மக்களவைத் தேர்தலில் மன்மோகன் சிங் போட்டியிடுவாரா?
13 ஆயிரம் கிராமங்களின் மண் உடன் தயாராகும் ஜாலியன்வாலாபாக் நினைவுச் சின்னம்!
அஸ்ஸாமில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்வு
பெங்களூருவில் விமான கண்காட்சி வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து: 300க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்