சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

உ.பி.யில் 74 மக்களவை தொகுதிகளை பாஜக கைப்பற்றும்: அமைச்சர் ஜே.பி.நட்டா நம்பிக்கை

DIN | Published: 17th January 2019 03:02 AM


உத்தரப் பிரதேசத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சியின் புதிய கூட்டணியை வீழ்த்தி, மொத்தமுள்ள 80 எம்.பி. தொகுதிகளில் 74 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என மத்திய அமைச்சரும், அந்த மாநில மக்களவைத் தேர்தல் பொறுப்பாளருமான ஜே.பி.நட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
உத்தரப் பிரதேச மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டப் பிறகு லக்னெள வந்த ஜே.பி.நட்டாவை கட்சியின் மூத்த தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 
பின்னர் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் ஜே.பி.நட்டா கூறியதாவது: கடந்த தேர்தலின் போது பாஜக 71 இடங்களில், கூட்டணி கட்சியான அப்னா தளம் 2 இடங்கள் என மொத்தம் 73 இடங்களில் பாஜக வென்றது. வரும் மக்களவைத் தேர்தலில் கடந்த முறையை விட ஒரு இடம் கூடுதலாக அதாவது 74 எம்.பி. இடங்களை பாஜக கைப்பற்றும். 
வரும் மக்களவைத் தேர்தலில், உ.பி.யில் பாஜக பெரும் வெற்றியை பெற்று முந்தைய அனைத்து சாதனைகளையும் பாஜக முறியடிக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகள் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருக்கும். பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே பாஜகவின் வெற்றிக்கு காரணமாக அமையும். 
எங்களது தேர்தல் திட்டமானது வளர்ச்சியின் அடிப்படையிலானதே தவிர வகுப்புரீதியிலான அரசியல் சார்ந்தது அல்ல. சமாஜவாதியும், பகுஜன் சமாஜும் அமைத்துள்ள கூட்டணியால் பாஜகவின் வெற்றி பாதிப்பு இருக்காது. 
இதுபோன்ற கூட்டணி அமையும் என்று நாங்கள் முன்பே எதிர்பார்த்தோம். வரும் மக்களவைத் தேர்தலின்போது, நாங்கள் பயன்படுத்தும் தேர்தல் யுக்தியால் 50 % வாக்குகள் பாஜகவுக்கு பதிவாகும். 
மற்ற கட்சிகள் அனைத்தும் அரசியல் போட்டியில் ஈடுபடும்போது, அவர்கள் ஊழல் புரிவதற்காக செய்த பணிகளையே தங்களது சொந்த சாதனைகளாக கூறிக் கொள்கின்றன. ஆனால், பாஜகவோ கூட்டு முயற்சியே பெரும் வளர்ச்சி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார். 


 

More from the section

விமானத்தைக் கடத்துவதாக ஏர் இந்தியாவுக்கு மிரட்டல்; விமான நிலையங்களில் உஷார் நிலை
சிதம்பர ரகசியம்: மக்களவைத் தேர்தலில் மன்மோகன் சிங் போட்டியிடுவாரா?
13 ஆயிரம் கிராமங்களின் மண் உடன் தயாராகும் ஜாலியன்வாலாபாக் நினைவுச் சின்னம்!
அஸ்ஸாமில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்வு
பெங்களூருவில் விமான கண்காட்சி வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து: 300க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்