பயங்கரவாதத்தை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் அழைப்பு

பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச சமூகம் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். உலக நாடுகள்
தென் கொரிய தலைநகர் சியோலில் பாரம்பரிய அணிவகுப்பை அந்நாட்டு அதிபர்  மூன் ஜே-இன்னுடன் பார்வையிட்ட பிரதமர் மோடி.
தென் கொரிய தலைநகர் சியோலில் பாரம்பரிய அணிவகுப்பை அந்நாட்டு அதிபர்  மூன் ஜே-இன்னுடன் பார்வையிட்ட பிரதமர் மோடி.


பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச சமூகம் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்படுவதன் மூலம் பயங்கரவாத அமைப்புகளின் நிதிப் பரிமாற்றங்கள் முற்றிலுமாக தடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இரு நாள் பயணமாக தென் கொரியாவுக்கு வந்துள்ள மோடி, தனது பயணத்தின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை அந்நாட்டு அதிபர் மூன் ஜே-இன், அவரது மனைவி கிம் ஜோங் சூக் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாடுகளுக்கு இடையே உள்கட்டமைப்பு மேம்பாடு, ஊடகத் துறை ஒத்துழைப்பு, புத்தாக்க முயற்சிகளை மேம்படுத்துவது, பயங்கரவாதம், சர்வதேச குற்ற நடவடிக்கைகளைத் தடுப்பதில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை தொடர்பாக 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்த ஆவணங்கள் மோடி, மூன் ஜே-இன் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: இதுதவிர வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து இணைந்து செயல்படுவது குறித்து இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
அயோத்தி இளவரசி நினைவாக...: இது தவிர கி.பி. 48-இல் அயோத்தியில் இருந்து தென் கொரியா சென்று அந்நாட்டு மன்னர் கிம்-சுரோவை திருமணம் செய்த அயோத்தி இளவரசி சூரிரத்னாவின் நினைவாகவும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. தென் கொரியாவின் தொழில், வர்த்தகம், எரிசக்தி துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு கொரியா பிளஸ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை தொடரவும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
தென் கொரிய அதிபருக்கு நன்றி: பின்னர் பிரதமர் மோடி, தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மோடி கூறியதாவது:
இந்தியாவில் நிகழ்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியில் தென் கொரியா முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இந்தியாவில் தென் கொரியா நிறுவனங்கள் அதிகம் தொழில் நடத்தி வருகின்றன. புல்வாமாவில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்துக்கு தென் கொரிய அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். அதற்காக இந்தியா சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதம் பேராபத்து: பயங்கரவாத ஒழிப்பு விஷயத்தில் இந்தியாவும், தென் கொரியாவும் தொடர்ந்து இணைந்து செயல்பட நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இது தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சகம்- தென் கொரிய தேசிய காவல் அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா, தென் கொரியா மட்டுமல்ல, பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க சர்வதேச சமூகம் இணைந்து செயல்பட வேண்டிய நேரமிது. பயங்கரவாத ஒழிப்பு குறித்து பேசுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், உறுதியான நடவடிக்கைகளில் சர்வதேச சமூகம் ஈடுபட வேண்டும். அடிப்படைவாத தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை உலகின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பேராபத்தாக உருவெடுத்துள்ளன என்றார் மோடி.
வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி: சியோலில் உள்ள தென் கொரிய தேசிய ராணுவ வீரர்கள் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி சென்று அஞ்சலி செலுத்தினார். கொரிய போர் உள்பட பல்வேறு போர்களில் மரணமடைந்த தென் கொரிய வீரர்கள் அங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மோடிக்கு சியோல் அமைதி விருது
தென் கொரியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான சியோல் அமைதி விருது பிரதமர் மோடிக்கு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது. சர்வதேச ஒத்துழைப்பில் அவரது பங்களிப்பையும், சிறப்பான முடிவுகள் மூலம் சர்வதேச பொருளாதர வளர்ச்சிக்கு உதவிகரமாக இருந்தது ஆகியவற்றைப் பாராட்டி இந்த விருது அளிக்கப்பட்டது.
சியோலில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் சியோல் அமைதி விருது அறக்கட்டளை சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது. அப்போது, மோடியின் வாழ்க்கை, அரசியலில் அவரது சாதனைப் பயணம், பிரதமராக திறம்பட செயல்பட்டது குறித்த குறும்படம் ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது. விருதுடன் அளிக்கப்பட்ட 2 லட்சம் அமெரிக்க டாலரை (ரூ.1.42 கோடி) கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு அளிப்பதாக மோடி அறிவித்துள்ளார்.
விருதை பெற்றுக் கொண்டு மோடி பேசுகையில், இந்த விருதை மிகுந்த மரியாதையுடன் பெற்றுக் கொள்கிறேன். விருது அளித்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன். தென் கொரியாவைப் போலவே இந்தியாவும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 
அமைதிக்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகளை எல்லைக்கு அப்பால் இருந்து வரும் பயங்கரவாத செயல்கள் சீர்குலைக்கின்றன. இந்த விவகாரத்தில் நாம் மனிதாபிமானத்துடன் கைகோத்து செயல்பட வேண்டும். வெறுப்புணர்வுகளை நல்லிணக்கம் மூலமும், இடர்பாடுகளை வளர்ச்சியின் மூலமும் நாம் இணைந்து 
எதிர்கொள்வோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com