இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் நிதியுதவி: மத்திய உள்துறை அமைச்சகம்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் பெரும்பான்மையானவற்றுக்கு பாகிஸ்தான் நிதியுதவி அளித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் பெரும்பான்மையானவற்றுக்கு பாகிஸ்தான் நிதியுதவி அளித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர், ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியிலுள்ள புல்வாமா மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீது கடந்த 14-ஆம் தேதி நிகழ்த்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், பயங்கரவாத அமைப்புகளைக் கட்டுப்படுத்துமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானை வலியுறுத்தின.
இதைத் தொடர்ந்து, கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித் திட்டம் தீட்டியவரான ஹபீஸ் சயீதை தலைவராகக் கொண்ட ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்புக்கும், அதன் துணை அமைப்பான பாலா-ஏ-இன்சானியாத் அமைப்புக்கும் பாகிஸ்தான் வியாழக்கிழமை தடை விதித்தது. இந்த இரு அமைப்புகளிலும் சுமார் 50,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இத்துடன் சேர்த்து இதுவரை 69 பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை விதித்துள்ளதாக அந்நாட்டின் பயங்கரவாதத் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட 41 பயங்கரவாத அமைப்புகளில் பெரும்பாலானவை பாகிஸ்தானில் இருந்தோ அல்லது அந்நாட்டிலிருந்து நிதியுதவி பெற்றோ செயல்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹிஸ்புல்-முஜாகிதீன், அல் பாதர், ஹர்கத்-உல்-முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளும் அடங்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
166 பேரை பலிகொண்ட மும்பை தாக்குதலுக்கு முக்கியக் காரணமான லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புக்கு, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பே முன்னோடியாகத் திகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பை உலக பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா கடந்த 2014-ஆம் ஆண்டு அறிவித்தது.
லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புக்கும், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்கும் பாகிஸ்தான் தடை விதித்துள்ள போதிலும், அந்த அமைப்பின் தலைவர்களான மசூத் அஸாரும், ஹபீஸ் சயீதும் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com