இந்தியா உபரி நதிநீரை நிறுத்துவதால் கவலை இல்லை: பாகிஸ்தான்

சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் பங்கிலிருந்து தங்களுக்கு கிடைத்து வரும் உபரி நதிநீரை நிறுத்துவதால் எந்தக் கவலையும் இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.


சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் பங்கிலிருந்து தங்களுக்கு கிடைத்து வரும் உபரி நதிநீரை நிறுத்துவதால் எந்தக் கவலையும் இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்தியாவின் பங்கிலிருந்து பாகிஸ்தானுக்கு கிடைத்து வரும் உபரி நதிநீரை நிறுத்துவதென மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை அறிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பாகிஸ்தான் நீர் வளத்துறை அமைச்சக செயலர் கவாஜா சுமாயில் டான் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
கிழக்கிலிருந்து பாயும் ராவி, பியாஸ், சட்லஜ் நதிகளில் இந்தியா தனது பங்கு நீரை மடை மாற்றுவதிலோ, அதை தனது மக்களின் பயன்பாட்டுக்கு வழங்குவதிலோ எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஏனெனில், அது சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை மீறிய செயல் இல்லை. எனவே, இந்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அறிவிப்பு குறித்து பாகிஸ்தானுக்கு எவ்வித கவலையும் இல்லை.
ராவி ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதியில் ஷாபூர்கண்டி அணையை கட்ட இந்தியா விரும்பியபோதிலும், கடந்த 1995-ஆம் ஆண்டுமுதல் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது தனது பங்கு நதிநீர் பயன்படுத்தப்படாத வகையில் பாகிஸ்தானுக்குள் பாய்வதை தடுக்கும் வகையில் மீண்டும் அந்த அணையை கட்டும் பணியை தொடங்கியுள்ளது. இந்தியா தனது பங்கு நீரை நிறுத்துவதில் நாங்கள் கவலைப்பட ஏதுமில்லை.
ஆனால், மேற்கிலிருந்து பாயும் சிந்து, ஜீலம், செனாப் நதிநீரை இந்தியா பயன்படுத்தினாலோ, அல்லது மடை மாற்றினாலோ பாகிஸ்தான் நிச்சயமாக ஆட்சேபம் தெரிவிக்கும் என்று கவாஜா சுமாயில் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
இவ்விவகாரம் குறித்து சிந்து நதிநீர் விவகாரத்துக்கான பாகிஸ்தான் ஆணையர் சையது மெஹர் அலி ஷா கூறுகையில், ஷாபூர்கண்டி அணைத் திட்டமானது, ரஞ்சித் சாகர் அணையின் 2-ஆவது பகுதி திட்டம் போன்றதாகும். இந்த அணையின் மூலமாக மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதுடன், அதிலிருந்து பாசனத்துக்கும் நீர் திறக்கப்படும் என்றார்.
இந்நிலையில், புல்வாமா தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் சிந்து நதிநீர் விவகாரத்துக்கான இந்திய ஆணையர் உள்ளிட்டோர் அடங்கிய நிபுணர்கள் குழு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கோத்ரி தடுப்பணை பகுதியில் ஆய்வு மேற்கொள்ள இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த சையது மெஹர், அந்த விவகாரத்தில் நல்லது நடக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
முன்னதாக, மூவர் அடங்கிய பாகிஸ்தான் நிபுணர்கள் குழு இந்தியாவில் செனாப் ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பகல் துல், கல்னை, ரட்லே, பக்லிஹர் நீர் மின் நிலையங்களில் இம்மாத தொடக்கத்தில் தனது வருடாந்திர ஆய்வை நிறைவு செய்தது. 
அதேபோல், புல்வாமா தாக்குதலுக்கு இரு நாள்கள் முன்பாக, பாகிஸ்தானுடன் இணைந்து கட்டுவதாக திட்டமிடப்பட்டுள்ள பல்டி கலான், கலாரூஸ், தமாஷா நீர் மின் நிலையங்களின் வடிவமைப்பு தகவல்களை இந்தியா அந்நாட்டுடன் பகிர்ந்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com