வந்தே பாரத் விரைவு ரயிலைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மணிக்கு 160 கிமீ பயணிக்கக் கூடிய வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்
புது தில்லியில் வந்தே பாரத் ரயில் சேவையை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி.
புது தில்லியில் வந்தே பாரத் ரயில் சேவையை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி.


மணிக்கு 160 கிமீ பயணிக்கக் கூடிய வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் பல்வேறு புதுமைகளை மத்திய அரசு புகுத்தி வருகிறது. அந்த வகையில், பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில், மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் என்ற ரயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில்பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரித்தது.
இந்த ரயிலின் சோதனை ஓட்டங்கள் அண்மையில் நிறைவடைந்தன. அப்போது மணிக்கு 180 கிமீ வேகம் வரை இயக்கப்பட்டு வந்தே பாரத் ரயில் பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். அப்போது, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர், தலைநகர் தில்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் வாராணசி வரையிலான தனது முதல் பயணத்தை வந்தே பாரத் ரயில் தொடங்கியது. அப்போது, பியூஷ் கோயல், ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர் ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.
முழுவதும் குளிரூட்டப்பட்ட 16 பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயிலில் 1,128 பயணிகள் பயணிக்கலாம். ரயில் பெட்டிகள் அனைத்திலும் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களின் வருகை குறித்து தகவல் தெரிவிக்கும் வசதியும், வை-ஃபை வசதியும் இந்த ரயிலில் உள்ளன. 
நவீன தொழில்நுட்பத்திலான கழிவறை, ஒவ்வொரு இருக்கைக்குக்கும் தனித்தனி மின்விளக்கு வசதி, ஒவ்வொரு பெட்டியிலும் குளிர்பான வசதிகள் என ரயில் முழுவதும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன.
தில்லியிலிருந்து வாராணசி வரை வாரம் 5 முறை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. ரயிலுக்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இரு நகரங்களுக்கிடையேயான பயண நேரத்தை வந்தே பாரத் ரயில் வெகுவாகக் குறைக்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com