மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டீர்கள்!: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதன் மூலம் பாகிஸ்தான் மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டது.
மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டீர்கள்!: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை


காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதன் மூலம் பாகிஸ்தான் மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டது. இதற்கு இந்தியத் தரப்பில் இருந்து உரிய பதிலடி தரப்படும் என்று அந்நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இத்தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியது இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் வியாழக்கிழமை மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்)  வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது ஒரு பயங்கரவாதி வெடிபொருள்கள் நிரப்பிய காரை மோதி வெடிக்கச் செய்தார். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளனர். இந்தியாவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய மிகமோசமான இந்த தாக்குதல் சம்பவம் தேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தேசம் துணை நிற்கும்: இந்நிலையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வந்தே பாரத் ரயில் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி  இது தொடர்பாக பேசியதாவது:
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் தேசமே அவர்களுக்கு துணை நிற்கிறது.
பயங்கரவாதிகளைத் தூண்டிவிட்டு இதுபோன்ற தாக்குதல்களை நிகழ்த்துவதன் மூலம் இந்தியாவை பலவீனமாக்கிவிடலாம் என்று அண்டை நாடு (பாகிஸ்தான்) நினைக்கிறது. அவர்களுக்கு நான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கிறேன். பயங்கரவாதிகளைத் தூண்டிவிட்டு இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் நீங்கள் மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டீர்கள். இதற்கு இந்தியத் தரப்பில் இருந்து தகுந்த பதிலடி தரப்படும். இத்தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியது இருக்கும்.
அரசியலாக்க வேண்டாம்: பயங்கரவாதிகளின் கொடூரத் தாக்குதலால் இந்திய மக்களின் ரத்தம் கோபத்தால் கொதிப்படைந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் நிச்சயமாக கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள். இப்போது இந்திய ராணுவத்துக்கு முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயங்கரவாதத்தை முழுமையாக வேரறுப்பார்கள். இது நமது தேசத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல். என்னைக் குறை கூறுபவர்கள் யாரும் இந்த விஷயத்தை அரசியலாக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இது மிகவும் உணர்ச்சிகரமான பிரச்னை. இந்த விஷயத்தில் நாம் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயல்பட வேண்டும்.
நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்து, கண்டனம் தெரிவித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் பிரதமர் மோடி. முன்னதாக, தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தியாவை சீர்குலைக்க முடியாது: தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் நடைபெற்ற பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற மோடி, பெயர் குறிப்பிடாமல் பாகிஸ்தான் குறித்து பேசியதாவது:
அண்டை நாட்டின் தூண்டுதலின் பேரில் புல்வாமாவில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை சீர்குலைத்துவிட முடியும் என்று அந்நாடு நம்புவதாகத் தெரிகிறது. அவர்கள் கடைப்பிடிக்கும் தவறான கொள்கைகளாலும், விரோத மனப்போக்காலும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளனர். அதே நேரத்தில் இந்தியா சர்வதேச அளவில் சிறந்த நாடாக மிளிர்ந்து வருகிறது.
நமது நாட்டில் நிகழ்ந்துள்ள பயங்கரவாதத் தாக்குதலால் இந்தியர்கள் அனைவரும் கோபத்தில் கொதிப்படைந்த நிலையில் உள்ளனர் என்பது எனக்குப் புரிகிறது. நமது வீரர்களின் உயிர்த்தியாகம் ஒருபோதும் வீணாகாது என்று நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். நம் மீது தாக்குதல் தொடுத்த பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்த நேரத்தில், எப்போது, எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக முடிவெடுக்க ராணுவ வீரர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்றார் மோடி.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து வெள்ளிக்கிழமை தனது அரசியல் நிகழ்ச்சிகள் அனைத்தையும் மோடி ரத்து செய்துவிட்டார். எனினும், அரசு திட்டங்கள் தொடர்பான விழாக்களில் மட்டும் பங்கேற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com