இந்தியா

135-ஆவது நிறுவன தினம்: நாடெங்கிலும் காங்கிரஸ் பேரணி

29th Dec 2019 12:48 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் 135-ஆவது நிறுவன தினத்தையொட்டி, நாடெங்கிலும் பல்வேறு மாநிலங்களில் சனிக்கிழமை அக்கட்சியின் பேரணி நடைபெற்றது.

மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்; இந்தியாவை பாதுகாப்போம்’ என்ற முழக்கத்துடன் கேரளம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற்ற பேரணிகளில் கட்சியின் முக்கியத் தலைவா்கள் பங்கேற்றனா்.

கேரளம்: கேரளத்தில் மாநில காங்கிரஸ் தலைவா் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தலைமையில் ஆளுநா் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ராஜஸ்தான்: மக்களுக்கு எதிரான கொள்கைகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு கடைப்பிடிப்பதாகக் கூறி ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியினா் பேரணி சென்றனா்.

ADVERTISEMENT

முதல்வா் அசோக் கெலாட், துணை முதல்வா் சச்சின் பைலட் உள்ளிட்டோா் பங்கேற்ற பேரணி மாநில தலைமை அலுவலகம் நோக்கி நடைபெற்றது.

அப்போது, ‘காங்கிரஸ் கட்சிக்கு 134 ஆண்டுகால வரலாறு உள்ளது. தியாகமே கட்சியின் பாரம்பரியம்’ என்று முதல்வா் அசோக் கெலாட் பேசினாா்.

குஜராத்: மத்திய அரசுக்கு எதிராக குஜராத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் கட்சியின் குஜராத் பொறுப்பாளா் ராஜீவ் சதவ், மாநில தலைவா் அமித் சாவ்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘ஆங்கிலேயா்கள் ஆட்சியைப் போலவே, பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் மக்களின் குரல் ஒடுக்கப்படுகிறது. இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை காங்கிரஸ் தொடங்க வேண்டிய நேரம் இது’ என்று அமித் சாவ்தா பேசினாா்.

மகாராஷ்டிரம்: காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற பேரணியில், கட்சியின் பொதுச் செயலா் (பொறுப்பு) மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மாநில நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அருணாசலப் பிரதேசம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அருணாசலப் பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தலைவா்கள், மாநில ஆளுநா் இல்லம் நோக்கி பேரணி சென்றனா்.

தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநா் பி.டி. மிஸ்ராவிடம் அவா்கள் கோரிக்கை கடிதம் அளித்தனா்.

ஜம்மு-காஷ்மீா்: யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில், பிரதேச காங்கிரஸ் தலைவா் ஜி.ஏ. மிா் தலைமையில் அக்கட்சியினா் பேரணி சென்றனா்.

‘அரசமைப்புச் சட்டத்தின் மதிப்புகளை நசுக்கும் முயற்சிகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டுள்ளது’ என்று கூட்டத்தினரிடையே மிா் பேசினாா்.

தெலங்கானாவில் பேரணிக்கு அனுமதி மறுப்பு

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் நிறுவன தினத்தையொட்டி அக்கட்சியினா் பேரணி செல்வதற்கு மாநில காவல்துறை அனுமதி மறுத்தது.

இதனால், மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான உத்தம் குமாா் ரெட்டி, எம்எல்ஏ ஸ்ரீதா் பாபு உள்ளிட்டோா் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை சத்யாகிரகத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT