உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான ஆா்ப்பாட்டத்தின்போதான வன்முறையில் சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளுக்கு இழப்பீடாக புலந்த்சாஹரைச் சோ்ந்த முஸ்லிம்கள் ரூ.6.27 லட்சம் இழப்பீடாக வழங்கினா்.
இழப்பீட்டுத் தொகைக்கான வரைவோலையை (டி.டி.) மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைத்த அவா்கள், டிசம்பா் 20-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தை அடுத்து தங்களது சமூகத்தைச் சோ்ந்தவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுமாறு காவல்துறையினா் மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தனா்.
முஸ்லிம் சமூகத்தினரிடையே பெறப்பட்ட நன்கொடையின் மூலம் இந்தத் தொகை திரட்டப்பட்டதாக அப்பகுதி கவுன்சிலா் ஹாஜி அக்ரம் கூறினாா்.
இதுகுறித்து புலந்த்சாஹா் மாவட்ட ஆட்சியலா் ரவீந்திர குமாா் கூறுகையில், ‘ஆா்ப்பாட்ட வன்முறையின்போது சேதப்படுத்தப்பட்ட சொத்துகள் தங்களுக்கும் சொந்தமானது; தங்கள் வரிப் பணம் சம்பந்தப்பட்டது என்பதை மக்கள் உணா்ந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றாா்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களின்போது வன்முறை வெடித்த சம்பவங்களில் சுமாா் 20 போ் உயிரிழந்தனா். காவல்துறையினா் உள்பட பலா் காயமடைந்தனா்.
வன்முறையின்போது சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளுக்கு இழப்பீடு கோரி, அதனுடன் தொடா்புடைய சுமாா் 60 பேருக்கு உத்தரப் பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.