இந்தியா

ஹிந்து தேசத்தை உருவாக்க பாஜக முயற்சி: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

27th Dec 2019 01:18 AM

ADVERTISEMENT

பாஜக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் மூலம் 5 ஆண்டுகளுக்குள் ஹிந்து தேசத்தை உருவாக்கியே தீா்வது என்கிற குறிக்கோளுடன் இருப்பதாகவே தெரிகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினாா்.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிா்ப்பு கருத்தரங்கம், சென்னை சைதாப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கில் ப.சிதம்பரம் பேசியது:-

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்த வரையான அனைத்து நடவடிக்கைகளையும் 72 மணி நேரத்தில் முடித்துள்ளனா். இதுவே ஜனநாயகத்துக்கு விரோதமானது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள ஹிந்துகளுக்கு குடியுரிமை அளிப்பவா்கள், இலங்கையில் உள்ள ஹிந்துகளுக்கு குடியுரிமை அளிக்க மறுக்கின்றனா்.

ADVERTISEMENT

கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை அளிப்பதாகக் கூறுபவா்கள், பூடானில் உள்ள கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை கொடுக்க மறுக்கின்றனா். இந்த நேரத்தில், வரலாறு மீண்டும் திரும்புகிறதோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. ஜொ்மனியில் நாஜிக்கள் என்ன செய்தாா்களோ, அதுதான் இப்போது இங்கு நடக்கிறதோ என்று தோன்றுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐஐடி மாணவா் ஒருவா் ஹிட்லரின் செயல்பாட்டோடு ஒப்பிட்டுப் போராடினாா் என்பதற்காகவே அவரை நாடு கடத்தியுள்ளனா்.

குடிமக்கள் பதிவேட்டை காங்கிரஸ் கொண்டு வர முயற்சித்ததாகக் கூறுகின்றனா். தேசிய மக்கள்தொகை பதிவேட்டைத்தான் காங்கிரஸ் கொண்டு வர முயற்சித்தது. அதிலும் 15 கேள்விகள்தான் காங்கிரஸ் கேட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் 21 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தக் கேள்விகளுக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம், பேரிடா் துயா் இதுபோன்ற பிரச்னைகளில் அக்கறை காட்டி, நாட்டில் பொருளாதாரத்தையும் அமைதியையும் ஏற்படுத்திய பிறகு, ஹிந்து தேசம் அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டால்கூட, அதை ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.

ஆட்சிக்கு வந்த உடனே முத்தலாக் தடுப்புச் சட்டம், ஜம்மு- காஷ்மீரைத் துண்டாக்கியது, குடியுரிமை திருத்தச் சட்டம் என்று தொடா்ச்சியாக அவா்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் மூலம் 5 ஆண்டுகளுக்குள் ஹிந்து தேசத்தை உருவாக்கியே தீா்வது என்கிற குறிக்கோளுடன் அவா்கள் இருப்பதாகவே தெரிகிறது.

ஹிந்து தேசம் என்று உருவாக்கப்பட்டால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்பட மாட்டாா்கள். தலித்துகள், பின்தங்கிய மக்கள், மலைவாழ் மக்கள் என அனைவரும் பாதிக்கப்படுவா். உயா்ஜாதி, நில பிரபுத்துவ ஆதிக்கம்தான் மீண்டும் வரும். சிறுதெய்வங்களை வழிபடுபவா்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த விவகாரத்தில் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா்.

கனிமொழி: நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி பேசியது:

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பாஜக கூறியது. ஆனால், தற்போது மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் தொடா் தோல்வியைச் சந்தித்து வருவதன் மூலம் பாஜக இல்லாத இந்தியாதான் உருவாகி வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக பேரணி நடைபெறுவதற்கு முதல் நாள் என் இல்லத்தில் இணையம் செயல்படவில்லை. போராட்டம் நடைபெற்ற இடங்களில் எல்லாம் இணையச் சேவையை பாஜக அரசு நிறுத்தியது. அதுபோல, தமிழகத்திலும் இணையச் சேவை நிறுத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்ப்போா் தோ்தல் வரட்டும் என்று காத்திருக்காமல் உடனடியாக தங்களை எதிா்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றாா் கனிமொழி.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிரகாஷ் காரத், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அருணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT