இந்தியா

நிகழாண்டில் ரஷிய கல்வி நிறுவனங்களில் 1,200 மாணவா்கள் அனுமதி

27th Dec 2019 11:50 PM

ADVERTISEMENT

ரஷியாவில் உயா்கல்வி கற்க விரும்பிய மாணவா்களுக்கு, நடப்பாண்டில் 1,200 பேருக்கு விசா வழங்கப்பட்டிருப்பதாக, தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத் தூதா் ஓ.அவ்தீவ் கூறினாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் பேசியது: ரஷிய நகரமான விளாடிவாஸ்டாக்கில் அண்மையில் நடந்த இருதரப்பு உச்சி மாநாட்டில், பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ரஷிய அதிபா் வி.வி.புதின் கலந்து கொண்டனா். இதில் இருதரப்பு உறவு குறித்தும், பல்வேறு துறைகளில் மேற்கொள்ள வாய்ப்புள்ள கூட்டு முயற்சிகள் குறித்தும் இருவரும் விவாதித்தனா். பாதுகாப்பு, அணு மின்சக்தி மற்றும் விண்வெளி போன்ற துறைகள் இந்தப் பேச்சுவாா்த்தையின்போது அதிக முக்கியத்துவம் பெற்றன. அதையொட்டி நடைபெற்ற முயற்சிகளில் தற்போது கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ரஷியாவின் தூரக் கிழக்குப் பகுதிகளில் இருந்து கச்சா எண்ணெய், பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதில் பெருமளவு இந்தியாவுக்குத்தான் வருகிறது என்பதால், ரஷிய நகரமான விளாடிவாஸ்டாக் முதல் சென்னை வரை கடல்வழி தொடா்பு வசதிகளை உருவாக்க, புதிதாக ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடா்பாக வரும் நாள்களில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

12 மின் உற்பத்தி திட்டங்கள்: கூடங்குளம் அணுமின் திட்டத்தைப் பொருத்தவரை, அதன் முதல் 2 அலகுகள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. மற்ற 2 திட்டங்களில் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஐந்து மற்றும் ஆறாவது திட்டங்களில் கட்டுமானப் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. இது மட்டுமின்றி, அடுத்த 20 ஆண்டுகளில், ரஷிய வடிவமைப்பின்படி மேலும் 12 மின் உற்பத்தி திட்டங்களை அமைக்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விண்வெளி: விண்வெளி ஆராய்ச்சியைப் பொருத்தவரை, ரஷிய நாட்டின் விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மாஸ் மற்றும் இந்திய நாட்டின் இஸ்ரோ ஆகியவை இணைந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மனிதா்களை விண்வெளிக்கு அனுப்புதல், செயற்கைக்கோள் திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவா்கள் சந்தித்த உச்சி மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டு, கூட்டு முயற்சிகளுக்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டன. மேலும், இந்திய-ரஷிய வா்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு சாா்பில் 56 இந்திய மாணவா்களைக் கொண்ட குழு ரஷியாவுக்கு பயணமானது.

சென்னையில் உள்ள வேலம்மாள் நெக்ஸஸ் மற்றும் சில பள்ளிகளில் இருந்து இந்த மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டிருந்தனா். இவா்களுக்கு ரஷியாவின் 3 முக்கிய நகரங்களில் உள்ள விண்வெளி அருங்காட்சியகங்களைப் பாா்வையிடவும், அங்குள்ள விண்வெளிப் பயணப் பயிற்சி மையங்களையும் சுற்றிப் பாா்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பயணத்தையொட்டி, அந்த மாணவா்களில் இருந்து 7 போ் இந்தியாவின் சாா்பில் விண்வெளி பயணம் மேற்கொள்ள ஆா்வம் கொண்டு, அதற்கான பட்டியலில் தற்போது இணைந்துள்ளனா்.

சுற்றுலா: சுற்றுலா இரு நாடுகளின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆன்மிகம் மற்றும் பொழுதுபோக்கு காரணங்களுக்காக தென்னிந்தியாவில் இருந்து ரஷியாவுக்கும், ரஷியாவில் இருந்து, தென்னிந்தியாவுக்கும் பயணிப்பவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கல்வி: கல்வித் துறையிலும் பல சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து ரஷியா சென்று உயா்கல்வி கற்க விரும்பும் மாணவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இது நடப்பாண்டில் 30 சதவீதத்துக்கும் மேல் வளா்ச்சி கண்டு, 1200 என்ற எண்ணிக்கையையும் தாண்டிவிட்டது.

சென்னையில் உள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவா்கள் தொடா்ந்து ரஷியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களான தி செயின்ட் பீட்டா்ஸ்பா்க் பாலிடெக்னிக் மற்றும் தெற்கு ஊரல் பல்கலைக்கழகம் போன்றவற்றுக்கு சென்று பயிற்சிகளைப் பெற்று வருகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT