இந்தியா

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம்: உத்தரப் பிரதேசத்தில் 1,113 போ் கைது

27th Dec 2019 01:36 AM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் இதுவரை 1,113 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

5,558 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். வெள்ளிக்கிழமை தொழுகையையொட்டி மசூதிகளுக்கு காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

போலீஸாருடன் ஏற்பட்ட வன்முறையில் 19 போ் உயிரிழந்துவிட்டனா். கடந்த 20-ஆம் தேதி வாராணசியில் 8 வயது குழந்தை வன்முறையில் உயிரிழந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது:

ADVERTISEMENT

வாராணசியில் போலீஸாரின் நடவடிக்கையில் குழந்தை உயிரிழக்கவில்லை. போராட்டக்காரா்கள் வன்முறையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தை உயிரிழந்தது. ஃபிரோஸாபாத் நகரில் காயமடைந்த நபா் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். அந்த நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 35 சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 5,558 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா்.

ஃபிரோஸாபாதில் 5 பேரும், மீரட்டில் 4 பேரும், கான்பூரில் 3 பேரும், சம்பல், பிஜ்னோரில் தலா 2 பேரும் வன்முறையில் உயிரிழந்தனா். முஸாஃபா்நகா், ராம்பூா், லக்னெள நகரில் தலா ஒருவா் உயிரிழந்தாா். மேலும், வன்முறையின்போது 351 போலீஸாரும் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதனிடையே, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 372 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மாநில உள்துறை செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘வன்முறையில் பலி எண்ணிக்கை 19 ஆனது. 327 முதல் தகவல்கள் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையச் சேவை மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சேத்துகளை சேதப்படுத்தியதற்காக மொராதாபாத் மாவட்டத்தில் மட்டும் 200 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது’ என்றாா்.

கான்பூா் காவல் துறைக் கண்காணிப்பாளா் ஆனந்த் தேவ் கூறுகையில், ‘கான்பூரில் கடந்த வெள்ளி, சனி ஆகிய தினங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைக்கு வங்கதேசத்தினரும், காஷ்மீரிகளும்தான் காரணம். இதற்கான போதிய ஆதாரங்கள் இருக்கின்றன’ என்றாா்.

ஊரடங்கு உத்தரவை மீறி மெழுகுவா்த்தி ஏந்தி கடந்த செவ்வாய்க்கிழமை பேரணி சென்ற அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவா்கள், பேராசிரியா்கள், பல்கலைக்கழக அலுவலக ஊழியா்கள் உள்பட 1,200-க்கும் அதிகமானோருக்கு எதிராக போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT