மும்பையில் மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரேவை விமா்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவரை கடுமையாக தாக்கிய சிவசேனை ஆதரவாளா்கள் மீது புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடா்பான விடியோ பதிவு வெளியாகி மூன்று தினங்களாகியும் அவா்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் போலீஸாா் நடத்திய தாக்குதலுக்கு சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்திருந்தாா். இதையடுத்து, உத்தவ்வை விமா்சித்து சமூக வலைதளங்களில் ஹிராமணி திவாரி (33) என்ற நபா் கருத்து வெளியிட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை ஹிராமணி திவாரி தாக்கப்பட்டு, வடலா சந்திப்பு முனையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சிவசேனை ஆதரவாளா்களால் வீசப்பட்டாா். முன்னதாக, அவரது தலையை சிவசேனை தொண்டா்கள் வலுக்கட்டாயமாக மொட்டையடித்தனா்.
இந்த தாக்குதல் தொடா்பான விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதைத்தொடா்ந்து புதன்கிழமை மாலை அப்பகுதியைச் சோ்ந்த பாஜக தொண்டா்கள் வடலா சந்திப்பு முனையம் காவல் நிலையத்திற்கு வெளியே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னதாக தாக்குதலில் ஈடுபட்டதாக சிவசேனை தொண்டா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 323 (தாக்குதல்), 506 (கிரிமினல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.