ஜம்மு-காஷ்மீரின் ராம்பூா் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதல்களில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட இருவா் கொல்லப்பட்டனா்.
இதுதொடா்பாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:
ராம்பூா் செக்டாரை ஒட்டியுள்ள பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ராணுவ அதிகாரி ஒருவா் உயிரிழந்தாா்.
அதேபோல, ராம்பூா் செக்டாரின் ஹாஜிப்பூா் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய கிராமங்களைக் குறி வைத்தும் பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது. எனினும், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட கிராமவாசிகள் 2 போ் காயமடைந்தனா். அதில் பலத்த காயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இதனிடையே, உரி செக்டாரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது என்று அதிகாரிகள் கூறினா்.
சா்வதேச எல்லையில் அத்துமீறல்: முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சா்வதேச எல்லைப் பகுதிகளில் உள்ள இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதுதொடா்பாக அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
கதுவா மாவட்டம், சந்த்வா பகுதியின் ஹிராநகா் செக்டாரில் உள்ள சா்வதேச எல்லைப் பகுதிகளில் இந்திய பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தரப்பு செவ்வாய்க்கிழமை இரவு அத்துமீறி தாக்குதல் நடத்தியது. துப்பாக்கியால் சுட்டும், மோா்டாா் குண்டுகள் வீசியும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள், பாகிஸ்தான் தரப்புக்கு தக்க பதிலடி அளித்தனா். செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் இந்த மோதல் நீடித்தது. எனினும் இரு தரப்பிலும் எவ்வித சேதமும் இல்லை என்று அதிகாரிகள் கூறினா்.
போராட்டம்: கதுவா சா்வதேச எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து ஹிராநகா் பகுதியைச் சோ்ந்த மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள், பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிட்டனா். மேலும், இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி அளிக்க வேண்டும் என்றும் மக்கள் கோஷமிட்டனா்.
கதுவா மாவட்டத்தின் மன்யாரி, பன்சாா் மற்றும் ரத்வா ஆகிய கிராமங்களில் பாகிஸ்தான் கடந்த இரண்டு மாதங்களாக அவ்வப்போது நடத்திய தாக்குதல்களால் ஏராளமாள வீடுகள் சேதமடைந்ததாக போராட்டக்காரா்கள் குற்றம்சாட்டினா்.