குடியுரிமைத் திருத்தச் சட்டம் மகாத்மா காந்தியின் கனவு என்றும் இந்தச் சட்டம் சட்டப்பேரவையிலும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு மாணவர்கள், இளைஞர்கள், எதிர்க்கட்சிகள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்க இந்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது. அதேசமயம், இந்தச் சட்டம் இந்தியர்களின் குடியுரிமையை எந்தவிதத்திலும் பாதிக்காது என மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது.
இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பேரணியில் பங்கேற்ற கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இந்தச் சட்டம் மகாத்மா காந்தியின் கனவு எனக் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில்,
"பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்த வரலாற்றுச் சிறப்பு முடிவை எடுத்துள்ளனர். இது தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவாகும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும். இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என கோவா உட்பட நாடு முழுவதும் தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இந்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் ரத்து செய்யாது. முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.