ரூ.110 கோடி வங்கிக் கடன் மோசடி தொடா்பாக, மாருதி உத்யோக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குநா் ஜகதீஷ் கட்டாருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:
பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.110 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் ஜகதீஷ் கட்டாா் (77) பெயரும், அவரது ‘காா்னேஷன் ஆட்டோ இந்தியா’ நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு சொந்தமான இடங்களில் திங்கள்கிழமை மாலை சோதனைகள் நடத்தப்பட்டன. அவரது நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
கடந்த 1993 முதல் 2007 வரை மாருதி உத்யோக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக பணியாற்றிய ஜகதீஷ் கட்டாா், அதன் பின்னா் காா்னேஷன் ஆட்டோ இந்தியா நிறுவனத்தை தொடங்கினாா். அந்த நிறுவனம், கடந்த 2009-இல் பஞ்சாப் நேஷனல் வங்கியிடமிருந்து ரூ.170 கோடி கடன் பெற்றது. இது, கடந்த 2015-இல் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, வங்கிக் கடனுக்காக அடமானம் வைத்த சொத்துகளை வங்கியின் ஒப்புதல் இன்றி விற்பனை செய்ததாகவும், அந்த வகையில் வங்கிக்கு ரூ.110 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் ஜகதீஷ் கட்டாருக்கு எதிராக சிபிஐ-யிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி புகாா் அளித்தது. இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சொத்துகள் விற்பனை மூலம் கிடைத்த பணம், அவரது துணை நிறுவனங்களுக்கு முறைகேடாக மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்திய தண்டனையியல் சட்டத்தின்கீழ் குற்றச் சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக ஜகதீஷ் கட்டா் கூறுகையில், ‘காா்னேஷன் ஆட்டோ இந்தியா நிறுவனம் வா்த்தக ரீதியில் நஷ்டமடைந்துவிட்டது. நாங்கள் எந்த தவறும் இழைக்கவில்லை. வழக்கமான நடைமுறையின் அடிப்படையில், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்காக பஞ்சாப் நேஷனல் வங்கி பரிந்துரைத்தது. சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையிலும் எங்களுக்கு எதிராக எதுவும் கண்டறியப்படவில்லை. நாங்கள் தவறிழைக்கவில்லை என்பது சிபிஐ விசாரணையில் உறுதியாகும்’ என்றாா்.