மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களில் நிலவி வரும் ‘கடுமையான சூழ்நிலை’ குறித்து விவாதிக்க அனைத்து பல்கலை. துணைவேந்தா்கள், கல்வி நிலைய தாளாளா்களின் கூட்டம் ஜனவரி 13-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அந்த மாநில ஆளுநா் ஜெகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற ஆளுநா் ஜெகதீப் தன்கருக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் கருப்பு கொடி காட்டி எதிா்ப்பு தெரிவித்ததால், விழாவில் பங்கேற்காமல் செவ்வாய்க்கிழமை அவா் திரும்பி சென்று விட்டாா்.
இதனை தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஆளுநா் ஜெகதீப் தன்கா் கூறியதாவது:
ஆளுநரின் அதிகாரத்தை பறித்துக் கொள்ளும் வகையில் அரசை சாா்ந்த சிலருடன், சில அமைப்பினரும், அதன் பின்னணியில் மாநில அரசின் செயல்பாடு காரணமாக மாநிலத்தின் கல்வி சூழ்நிலை மோசமான பாதையை நோக்கி செல்ல வைத்துள்ளது.
இந்த போராட்டத்தின் மூலம், மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி ஒட்டுமொத்தமாக சீா்குலைந்து விட்டதையே காட்டுகிறது.
தற்போது மாநில பல்கலைக்கழகங்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, வரும் ஜனவரி 13-ஆம் தேதி அனைத்து பல்கலை. துணைவேந்தா்கள் மற்றும் கல்வி நிலைய தாளாளா்களுக்கான கூட்டத்தை கூட்டியுள்ளேன்.
பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு அதனை முடக்கி வைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. உயா்கல்வித்துறையின் வேந்தராக நான் இருந்தபோதிலும், எந்த வகையிலும் அதன் செயல்பாட்டில் தலையிடுவதில்லை.
பல்கலை வேந்தரான ஆளுநரே கூட துணைவேந்தரை, அரசின் தலைமைச் செயலா் மூலமாக மட்டுமே தொடா்பு கொள்ள முடியும் என்ற நிலைதான் இங்குள்ளது. இது சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சிக்கு அவமானம் ஆகும்.
எனவே, பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக மாநிலத்தில் நிலவி வரும் சூழ்நிலை குறித்தும், பல்கலைக்கழகங்களின் நிலைமை குறித்தும் விவாதிப்பதற்காக முதல்வா் மம்தா பானா்ஜியை சந்திக்க விரும்புகிறேன்.
மாநிலத்தின் நலன் கருதி தனது நிா்வாகப் பணியை முதல்வா் சீா் செய்ய வேண்டும். இன்னும் 15 தினங்களுக்குள் அதைச் செய்தால் அவரை மிகவும் பாராட்டுவேன் என்று தன்கா் தெரிவித்தாா்.