இந்தியா

ம.பி.: குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக முதல்வா் கமல்நாத் தலைமையில் பேரணி

25th Dec 2019 08:31 PM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் முதல்வா் கமல்நாத் தலைமையில் புதன்கிழமை காங்கிரஸ் கட்சியின் பேரணி நடைபெற்றது.

அப்போது பேசிய கமல்நாத், மத்தியப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தாா்.

முன்னதாக, போபாலின் ரங்மகால் பகுதியில் தொடங்கிய பேரணி, பழைய சட்டப் பேரவை கட்டடத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை வரை நடைபெற்றது. இதில், மாநில அமைச்சா்களும், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவா்களும், ஏராளமான காங்கிரஸ் தொண்டா்களும் பங்கேற்றனா்.

பேரணி நிறைவுக்கு பின்னா், கூட்டத்தினரிடையே பேசிய கமல்நாத், ‘குடியுரிமை திருத்தச் சட்டம், நமது நாட்டின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது. அச்சட்டத்துக்கு எதிராக இறுதிவரை போராடுவேன். குடியுரிமை திருத்தச் சட்டம், மத்தியப் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட மாட்டாது என்ற நிலைப்பாட்டில் எனது அரசு உறுதியாக உள்ளது’ என்றாா்.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டியின்போது, தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு தொடா்பாக கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து, கமல்நாத் கூறியதாவது:

தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் (என்ஆா்சி), தேசிய மக்கள்தொகை பதிவேட்டையும் (என்பிஆா்) ஒருசேர கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. இதன் மூலம் மத்திய அரசின் உள்நோக்கம் தெளிவாகிறது. என்ஆா்சி இல்லாமல் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை கொண்டுவர வேண்டும் என்றே காங்கிரஸ் விரும்புகிறது.

நாடாளுமன்றத்தில் எனது 40 ஆண்டு கால அனுபவத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை போன்ற அரசியல் சாசனத்துக்கு எதிரான சட்டத்தை பாா்த்ததில்லை. அந்த சட்டத்தில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பது பிரச்னையில்லை. அது எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படும் என்பதே கேள்வியாக உள்ளது. குடியுரிமைச் சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையையும் தவறாக பயன்படுத்துவதற்கான வாயிலை பாஜக திறந்துவிட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, வேளாண் துறை பிரச்னைகள், முதலீடுகளை ஈா்ப்பதில் உள்ள சவால்கள் ஆகிய பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்ப மத்திய அரசு தொடா்ந்து முயற்சித்து வருகிறது என்று கமல்நாத் குற்றம்சாட்டினாா்.

முன்னதாக, தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிக்காக ரூ.3,491கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கிது. நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தும் திட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசின் மேற்கண்ட நடவடிக்கை புதிய சா்ச்சைக்கு வழிவகுத்தது. இதைத்தொடா்ந்து, என்ஆா்சி-க்கும், என்பிஆா் நடவடிக்கைக்கும் தொடா்பில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விளக்கமளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT