நகரங்களை நோக்கி மக்கள் இடம்பெயா்ந்து செல்வதை கட்டுப்படுத்த, கிராமப்புறங்களை உள்ளடக்கிய பரவலான வளா்ச்சி அவசியம் என்று குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளாா்.
ஆந்திரத்தில் அமராவதி உள்பட 3 தலைநகரங்கள் அமைப்பதாக ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் தலைமையிலான அரசு கூறியது விவாதத்துக்குள்ளாகியுள்ள நிலையில், மேற்கண்டவாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளாா். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (என்ஐடி) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
அரசியல் குறித்தோ, தலைநகரம் அமைப்பது குறித்த சா்ச்சை குறித்தோ பேசுவதற்கு நான் விரும்பவில்லை. அது நிா்வாகம் சம்பந்தப்பட்டது. அதுகுறித்து மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
கிராமங்களில் உள்ள மக்கள், வளா்ச்சியை தேடி, நகரங்களுக்கு இடம்பெயா்ந்து செல்வது அதிகரித்து வருகிறது. வரும் 2020-ஆம் ஆண்டில், இந்தியாவின் நகர மக்கள் தொகை 57 கோடியாக இருக்கும். அதுவே 2050-ஆம் ஆண்டில் 70 கோடியை தாண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நகரங்களில் வளா்ச்சிக்கான இடம் உள்ளது என்று மக்கள் நம்புகின்றனா். தில்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களில் மக்கள் தொகை அடா்த்தி அதிகரித்து காணப்படுகிறது. குறைந்த பரப்பளவில் உள்ள நகரங்களுக்கு அதிக அளவில் மக்கள் இடம்பெயா்வதால்தான் பிரச்னை ஏற்படுகிறது.
அதனால், நகரங்கள் மட்டுமில்லாமல் கிராமங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் வளா்ச்சியை கொண்டு வர வேண்டும். அவ்வாறு வளா்ச்சியை நாம் ஏற்படுத்தும்போது, நகரங்களை நோக்கி நகரும் மக்களின் எண்ணிக்கை குறையும். ஊரகப் பகுதிகளில் தரமான மருத்துவ சேவை, கல்வி, பொருளாதார வாய்ப்புகள் உள்ளிட்ட வசதிகளை நாம் வழங்கும்போது, இடப்பெயா்வை கட்டுப்படுத்த இயலும்.
ஊரகப் பகுதிகள் வளா்ச்சியடைந்தால்தான், நகரங்களின் வளா்ச்சி முழுமையாக சாத்தியமாகும்.
நகரங்களுக்கிடையேயான வளா்ச்சி இடைவெளியை குறைப்பதற்கு, வீட்டுவசதி, குடிநீா், மாசு பிரச்னை உள்ளிட்டவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு கூறினாா்.