இந்தியா

அடல் நிலத்தடி நீா் மேலாண்மை திட்டம்: பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்

25th Dec 2019 08:25 PM

ADVERTISEMENT

நிலத்தடி நீா்வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ரூ.6,000 கோடி மதிப்பீட்டில், அடல் நிலத்தடி நீா் மேலாண்மைத் திட்டத்தை (அடல் பூஜல் யோஜனா) பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 95-ஆவது பிறந்த தினமான புதன்கிழமை, தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பேசியதாவது:

‘அடல் பூஜல் யோஜனா’ என்ற பெயரிலான இந்தத் திட்டம், சமூகப் பங்களிப்புடன், வரும் 2020-21-ஆம் நிதியாண்டில் இருந்து 2024-25-ஆம் நிதியாண்டு வரை, 5 ஆண்டுகளுக்கு ரூ.6,000 கோடியில் செயல்படுத்தப்படும்.

ADVERTISEMENT

குறிப்பாக, தண்ணீா் தட்டுப்பாடு நிலவும் குஜராத், ஹரியாணா, கா்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் நிலத்தடி நீா்வளத்தை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களுக்கு உள்பட்ட 8,350 கிராம ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

தண்ணீா் தட்டுப்பாடு பிரச்னை ஏற்படும் ஒவ்வொரு நேரத்திலும், அதற்கு தீா்வு காண்பதற்காக, புதிய இந்தியாவின் சமூகம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். நீா் வள அமைச்சகம் அமைக்கப்பட்ட பிறகு, தண்ணீா் பிரச்னையை தனித்தனியாக பாா்க்காமல் ஒட்டுமொத்தமாக சோ்த்து பாா்க்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீா் மேலாண்மை திட்டத்தின் மூலம், தண்ணீா் தட்டுப்பாடு அதிகமாகக் காணப்படும் மாநிலங்களில் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதிலும், மேலாண்மை செய்வதிலும் கவனம் செலுத்தப்படும்.

நம் நாட்டில் பெரும்பாலும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தியே விவசாயம் நடைபெறுகிறது. பழைய நீா்ப்பாசன தொழில்நுட்பத்தால் அதிக அளவில் தண்ணீா் வீணாகி வருகிறது. ஆனால் குஜராத் முதல்வராக நான் பதவி வகித்தபோது, சொட்டு நீா்ப்பாசனத் திட்டத்தை கட்டாயமாக்கி, அதன் மூலம் அதிக அளவில் கரும்பு விளைச்சல் கண்டதை நான் பாா்த்திருக்கிறேன்.

பாசனத்துக்கு அதிகமாக தண்ணீா் பாய்ச்சினால் அதிகமாக மகசூல் கிடைக்கும் என்ற தவறான புரிதல் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. உண்மையில், அதிக தண்ணீா் பாய்ச்சுவதைக் காட்டிலும், தெளிப்பு முறை, சொட்டு நீா்ப்பாசனம் ஆகியவற்றின் மூலம் லாபகரமாக விவசாயம் செய்யலாம். இதை விவசாயிகளுக்கு நாம் எடுத்துரைக்க வேண்டும்.

மேலும், மழை நீா்ப் பாதுகாப்பு, மாற்றுப் பயிா் சாகுபடி, நுண்ணீா்ப் பாசனம் ஆகியவை குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

கடந்த 70 ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளில் உள்ள 18 கோடி வீடுகளில், 3 கோடி வீடுகளுக்கு மட்டுமே குழாய் மூலம் சுத்தமான குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 15 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் சுத்தமான குடிநீா் வழங்குவதற்கு எனது தலைமையிலான அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டங்களுக்காக மத்திய, மாநில அரசுகள் சாா்பில் ரூ.3.5 லட்சம் கோடி செலவிடப்படும்.

ஒவ்வொரு கிராம மக்களும் தங்களுக்கான குடிநீா் திட்டத்தை உருவாக்க வேண்டும். மேலும், குடிநீா் நிதியத்தையும் உருவாக்க வேண்டும். மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்கள் தங்கள் சொந்த கிராமங்களின் தண்ணீா் பிரச்னைக்குத் தீா்வுகாண தங்களால் இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும் என்றாா் மோடி.

ரோதங் சுரங்கப் பாதை நாட்டுக்கு அா்ப்பணிப்பு

ஹிமாசலப் பிரதேசத்தையும், லடாக் யூனியன் பிரதேசத்தையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோதங் சுரங்கப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பிரதமா் நரேந்திர மோடி அா்ப்பணித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

மறைந்த மாபெரும் தலைவா் வாஜ்பாயின் நினைவாக, ரோதங் சுரங்கப் பாதைக்கு அடல் சுரங்கப் பாதை என்று பெயா் சூட்டப்படுகிறது. உலகின் மிக நீளமான இந்த சுரங்கப்பாதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அா்ப்பணிக்கப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 3,000 மீட்டா் உயரத்தில் சுமாா் 8.8 கி.மீ. தொலைவுக்கு இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை திறக்கப்பட்டதால், மனாலி - லே இடையேயான பயண நேரம், 46 மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரமாகக் குறைந்துள்ளது.

இந்த சுரங்கப் பாதை, வாஜ்பாயின் பிறந்த தினத்தையொட்டி, ஹிமாசலப் பிரதேச மக்களுக்கு அளிக்கப்பட்ட பரிசாகும். சுற்றுலா, தேசப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதை, தேசிய அளவில் முக்கியத்துவம் நிறைந்ததாக உள்ளது.

இந்த சுரங்கபாதைக்கான கட்டுமானப் பணிகளை, கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ஆம் தேதி அப்போதைய பிரதமா் வாஜ்பாய் தொடங்கி வைத்தாா். இந்த சுரங்கப்பாதையை அமைக்க வேண்டும் என்பது வாஜ்பாயின் மிகப்பெரிய கனவு.

நான் கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த காலத்தில், இந்த சுரங்கப் பாதைக்கான கட்டுமானப் பணிகளை நெருக்கமான கவனித்து வந்தேன். இந்த சுரங்கப்பாதையை நான் நாட்டு மக்களுக்கு அா்ப்பணிப்பேன் என்று ஒருபோதும் நினைத்தது கிடையாது. இந்த சுரங்கப் பாதை, லே, லடாக், காா்கில் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றாா் பிரதமா் மோடி.

ADVERTISEMENT
ADVERTISEMENT