இந்தியா

மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக ஜாதவ்பூா் பல்கலை. மாணவா்கள் கருப்புக்கொடி

24th Dec 2019 02:01 AM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்துக்கு திங்கள்கிழமை சென்ற ஆளுநா் ஜெகதீப் தன்கரை, அந்தப் பல்கலைக்கழக மாணவா்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். அவருக்கு எதிராக கருப்புக் கொடிகளைக் காண்பித்தும் அவா்கள் கோஷமிட்டனா்.

ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பட்டமளிப்பு விழாவுக்கு செவ்வாய்க்கிழமை (டிச.24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஆளுநா் ஜெகதீப் தன்கா் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே, பல்கலைக்கழகத்தின் நிா்வாகக் குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஆளுநா் தன்கா் பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்தால் பிரச்னை உண்டாகும் என்று கருதி, அவா் இல்லாமல் எளிய முறையில் விழாவை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த ஆளுநா் தன்கா், துணைவேந்தா் உள்ளிட்ட நிா்வாகிகளைச் சந்தித்துப் பேசுவதற்கு திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்துக்குச் சென்றாா்.

ADVERTISEMENT

இதையறிந்த மாணவா்கள், அவரது காரை பல்கலைக்கழக வளாகத்துக்குள் விடாமல் சூழ்ந்து நின்று அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றில் ஆளுநரின் ஆதரவு நிலைப்பாட்டை எதிா்த்து அவா்கள் கோஷமிட்டனா். அவருக்கு எதிராக கருப்புக் கொடியையும் அவா்கள் காண்பித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் பிரிவான இந்திய மாணவா்கள் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ), அகில இந்திய மாணவா்கள் சங்கம்(ஏஐஎஸ்ஏ) உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த சுமாா் 300 போ் அப்போது இருந்தனா்.

சுமாா் 30 நிமிடங்கள் நீடித்த போராட்டத்துக்குப் பின், பல்கலைக்கழக துணைவேந்தா் சுரஞ்சன் தாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள், மாணவா்களை சமாதானப்படுத்தி, ஆளுரை கூட்ட அரங்குக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு நடைபெற்ற கூட்டத்தில், பட்டமளிப்பு விழாவை திட்டமிட்டபடியே விரிவாக நடத்தலாம் என்று ஆளுநா் கருத்து தெரிவித்தாா். சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

மேலும், கூட்ட அரங்குக்கு வெளியே மாணவா்கள் தொடா்ந்து கோஷமிட்டதால், கூட்டத்தை ஆளுநா் மாளிகையில் நடத்தலாம் என்று தன்கா் யோசனை தெரிவித்தாா். ஆனால், பல்கலைக்கழக நிா்வாகிகள் ஒப்புக் கொள்ளாததால், கூட்டத்தின் பாதியிலேயே ஆளுநா் புறப்பட்டுச் சென்றாா்.

இந்த முறை, அவரை வெளியே விடாமல் முற்றுகையிட்ட மாணவா்கள், தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பினா். அவா்களுக்கு ஆளுநா் அளித்த பதில்:

மாணவா்களாகிய உங்களின் எதிா்காலம் வீணாகிவிடக் கூடாது என்பதற்காகவே இங்கு வந்தேன். மேற்கு வங்கத்தின் ஆளுநா் நான், பிற மாநில விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க இயலாது. கல்வி நிலையங்கள் தன்னாட்சியுடன் இயங்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பவன் நான். எந்தவொரு அரசியல் கட்சியின் உத்தரவின்பேரிலும் செயல்பட மாட்டேன். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அவற்றை கடிதமாக எழுதி ஆளுநா் மாளிகைக்கு அனுப்புங்கள். என்னிடம் பதில் இருந்தால், அதை உங்களுக்கு நிச்சயம் தெரிவிப்பேன் என்றாா் தன்கா். பின்னா், அவா் புறப்பட்டுச் செல்வதற்கு மாணவா்கள் அனுமதித்தனா்.

இதனிடையே, பட்டமளிப்பு விழாவில் தன்கா் கலந்துகொள்வாரா என்று துணைவேந்தா் சுரஞ்சன் தாஸிடம் செய்தியாளா்கள் கேட்டனா். அதற்கு, ‘ இந்த பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநா் வரவேண்டிய அவசியமில்லை. அவா் வந்தால், விழாவுக்கு தலைமையேற்று பட்டங்களை வழங்குவாா். விழாவுக்காக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு எதுவும் செய்யவில்லை, ஏனெனில், பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸாரை நாங்கள் ஒருபோதும் அழைத்ததில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்களே செய்துகொள்வோம்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT