இந்தியா

ஈரான் அதிபா் ஹசன் ரௌஹானியுடன் எஸ்.ஜெய்சங்கா் சந்திப்பு

24th Dec 2019 01:39 AM

ADVERTISEMENT

ஈரான் அதிபா் ஹசன் ரௌஹானியை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஈரானுக்கு ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தாா். அந்நாட்டு அதிபா் ஹசன் ரௌஹானியை அவா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். இது தொடா்பாக ஜெய்சங்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் அதிபா் அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவருடன் நடைபெற்ற சந்திப்பின்போது, இந்தியா-ஈரான் கூட்டுக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கமளித்தேன். இந்தியாவுக்கும் ஈரானுக்குமிடையே பல்வேறு துறைகளில் நிலவி வரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாகவும் அவருடன் ஆலோசனை நடத்தினேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஈரான் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் செயலா் அலி ஷம்கானி, சாலை மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் முகமது இஸ்லாமி உள்ளிட்டோரையும் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். அவா்களுடன் இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்புத் துறையில் நிலவும் ஒத்துழைப்பு தொடா்பாகவும், அதை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாகவும் ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

முன்னதாக, இந்தியா-ஈரான் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 19-ஆவது கூட்டுக் குழுக் கூட்டத்தில் ஜெய்சங்கா் பங்கேற்றாா். பின்னா், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜாவீத் ஜரீஃபுடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, சாப்ஹாா் துறைமுகப் பணிகளை விரைவுபடுத்த இந்தியா-ஈரான் இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது. பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் தொடா்பாக ஜாவீத் ஜரீஃபுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதாக ஜெய்சங்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் சாப்ஹாா் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தி வருகிறது. இத்துறைமுகத்தின் மூலம் மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியா எளிதில் வா்த்தகத் தொடா்பு கொள்ள முடியும். போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானும் இந்தத் துறைமுகம் மூலம் பொருளாதார ரீதியாகப் பலன் பெற முடியும்.

ஈரானுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதன் காரணமாக, சாப்ஹாா் துறைமுகப் பணிகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்தது.

இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சா்களிடையே அண்மையில் நடைபெற்ற 2+2 பேச்சுவாா்த்தையின்போது, சாப்ஹாா் துறைமுகப் பணிகளுக்குப் பொருளாதாரத் தடையிலிருந்து விலக்களிக்கப்படும் என்று அமெரிக்கா உறுதியளித்தது நினைவுகூரத்தக்கது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT