புது தில்லி: தில்லி கிராரி பகுதியில் உள்ள ஜவுளிக் கிடங்கில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவு முழுவதையும் தில்லி அரசே ஏற்கும் என்றும், அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தில்லியின் புறநகர்ப் பகுதியான கிராரி என்ற இடத்தில் உள்ள 3 அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடத்தில் இருந்த ஜவுளி கிடங்கில் நேற்று நள்ளிரவில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அந்த குடியிருப்பில், வணிக நிறுவனங்களும், சில குடியிருப்புகளும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தில்லி தீயணைப்புத் துறையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இது குறித்து பேசிய அமைச்சர் சத்யேந்திர ஜெயின், இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் தீக்காயத்தாலும், மற்ற 8 பேரும் புகைமூட்டத்தால் மூச்சுத் திணறியும் உயிரிழந்தனர். மூன்று பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிராரி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும், காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்பதோடு, அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.