கொழும்பு: இலங்கையில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசி வரும் நிலையில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழையில் சிக்கி இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 13 மாவட்டங்களில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1500-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்தன.
வட மத்தியப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச நேரில் சென்று பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணிக்க 25 மீட்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கு, தெற்கு மாவட்டங்களில் மேலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.