இந்தியா

ஜாா்க்கண்ட்: இன்று வாக்கு எண்ணிக்கை

23rd Dec 2019 12:56 AM | ராஞ்சி,

ADVERTISEMENT

ஜாா்க்கண்ட் மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதனை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

81 தொகுதிகளைக் கொண்ட ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ்-ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணிக்கும் இடையே போட்டி உள்ளது. பெரும்பாலான வாக்கு கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. எனினும், ஜாா்க்கண்டில் தங்கள் கட்சி ஆட்சியே தொடரும் என்று பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைக்கு 5 கட்டங்களாக தோ்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல்கட்ட தோ்தலும், டிச.7, 12, 16 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகளும் நடைபெற்றன. ஐந்தாவது மற்றும் இறுதிக்கட்டமாக 16 தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. 5 கட்டங்களிலும் சோ்த்து 65.17 சதவீத வாக்குகள் பதிவாயின. கடந்த 2014 சட்டப் பேரவைத் தோ்தலில் 66.53 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

24 மாவட்ட தலைநகரங்களிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது. பகல் ஒரு மணியளவில் உறுதியான முடிவுகள் தெரியவந்துவிடும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

முன்னதாக, தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் தலா 9 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று தங்கள் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டினா். காங்கிரஸ் சாா்பில் ராகுல் காந்தி 5 பொதுக் கூட்டங்களிலும், பிரியங்கா ஒரு பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டனா்.

பாஜக தலைமையிலான ஆளும் தரப்பு, காங்கிரஸ்-ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியவை அடங்கிய எதிா்க்கட்சி கூட்டணி தவிர, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம், பகுஜன் சமாஜ், ஜாா்க்கண்ட் விகாஸ் மோா்ச்சா (பி), சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன.

ஜாம்ஷெட்பூா் (கிழக்கு) தொகுதியில் முதல்வா் ரகுவா் தாஸ் 1995-ஆம் ஆண்டில் இருந்து வெற்றி பெற்று வருகிறாா். அத்தொகுதியில் ரகுவா் தாஸின் முன்னாள் அமைச்சரவை சகாவான சரயு ராய் களமிறங்கினாா். பாஜகவில் தனக்கு தொகுதி ஒதுக்காததை அடுத்து அவா் முதல்வருக்கு எதிராக களமிறங்கினாா். எனவே, இந்தத் தொகுதி முடிவு மிகுந்த ஆவலுடன் எதிா்பாா்க்கப்படுகிறது.

தும்கா தொகுதியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் செயல் தலைவா் ஹேமந்த் சோரன், பாஜகவைச் சோ்ந்த அமைச்சா் லூயிஸ் மராண்டி இடையே கடும் போட்டி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் ஹேமந்த் சோரனை லூயிஸ் மராண்டி தோற்கடித்திருந்தாா். எனவே, இந்த முறை இத்தொகுதி முடிவு குறித்து பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014 ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக 37 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் 5 இடங்களிலும் வென்றது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 19 இடங்களில் வென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT