இந்தியா

குடியுரிமைச் சட்டம்: இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை - தில்லி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி

23rd Dec 2019 03:26 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

 

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். மேலும், இந்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தில்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளில் வசிப்போருக்கு சொத்துரிமைப் பத்திரம் வழங்கும் மத்திய அரசின் முடிவை வரவேற்று பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாஜக ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மற்ற பொதுக் கூட்டங்களை போல் அல்லாமல், இக்கூட்டத்தில் அவர் சுமார் 100 நிமிஷங்களுக்கும் மேல் பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாட்டில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது குற்றம்சுமத்தும் எதிர்க்கட்சிகளுக்கு உறுதியான பதிலடி தரும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது.

"வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் சிறப்பு' என தனது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, மேலும் பேசியதாவது:

ADVERTISEMENT

இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் சிசிஏ, என்ஆர்சியால் பாதிக்கப்பட மாட்டார்கள். "நாடு முழுவதும் என்ஆர்சியை அமல்படுத்தி இந்திய முஸ்லிம்களைத் தடுப்புக் காவல் முகாம்களுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிடுகிறது' என தவறான தகவல்களை காங்கிரஸ் கட்சி பரப்பி வருகிறது. வேறு சில எதிர்க்கட்சிகளுடனும், "நகர்ப்புற நக்சல்'களுடனும் இணைந்து இச்செயலில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. என்ஆர்சியை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்திலோ, அமைச்சரவைக் கூட்டத்திலோ இன்னும் விவாதிக்கக்கூட இல்லை.

சட்டத்தைப் படியுங்கள்: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்புபவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இச்சட்டத்துக்கு எதிராகப் போராடும் மக்கள், அதனை முழுமையாக வாசித்து புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். சட்டத்தை முழுமையாகப் புரிந்து கொண்டால், எதிர்க்கட்சிகளின் சதி வலையில் மக்கள் சிக்க மாட்டார்கள். ஆண்டாண்டு காலமாக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சி தற்போது இந்த விவகாரத்தில் நாட்டு மக்களை பிரிக்கப் பார்க்கிறது. நாட்டை ஒன்றிணைக்கும் பணியில்தான் நான் ஈடுபட்டுள்ளேன். நாட்டைப் பிரிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளை நான் அனுமதிக்க மாட்டேன்.

காங்கிரஸ் மீது சாடல்: அகதிகளுக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் வித்தியாசம் உண்டு. ஊடுருவல்காரர்கள் தங்கள் அடையாளத்தை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால், அகதிகளோ தங்கள் அடையாளத்தை ஒரு போதும் மறைக்க மாட்டார்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக முன்பு பேசியுள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, மக்களுக்கு உறுதி அளித்திருந்தது. இதைத்தான் நாங்கள் இப்போது நிறைவேற்றியுள்ளோம். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு முன்பு ஆதரவு அளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தற்போது வாக்கு வங்கி அரசியலுக்காக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

பல இஸ்லாமிய நாடுகள் என்னைக் கௌரவித்துள்ளன. உலக நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் என்னை ஆதரித்தால், இந்திய முஸ்லிம்களை எனக்கு எதிராக எப்படித் திருப்ப முடியும் என காங்கிரஸ் கட்சி பயப்படுகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக எனக்கு எதிராக பல முயற்சிகளை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டன. ஆனால், அவை பலனளிக்கவில்லை. எதிர்காலத்திலும் பலனளிக்காது.
 

எதிர்க்கட்சிகளுக்கு சவால்: ஏழைகளுக்காக மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தும்போது, அவர்கள் கோயிலுக்குப் போகிறார்களா அல்லது மசூதிக்குப் போகிறார்களா எனப் பார்த்து நாங்கள் திட்டங்களை அமல்படுத்துவதில்லை. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 1.5 கோடி வீடுகளை ஏழைகளுக்கு கட்டிக் கொடுத்துள்ளோம்.

மதத்தின் அடிப்படையிலா வீடுகளைக் கட்டிக் கொடுத்தோம்? தில்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளில் வசிப்பவர்களுக்கு சொத்துரிமை பத்திரம் வழங்க மத்திய அரசு முடிவெடுத்த போது, அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டோமா? எனது பணிகளில் வேற்றுமை இருந்தால் அதைப் பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சிகளுக்கு நான் பகிரங்க சவால் விடுகிறேன். நாடாளுமன்றத்தையும், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசையும் மதிக்குமாறு எதிர்க்கட்சிகளை நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

காந்தியின் திட்டமே சட்டம்! "குடியுரிமை திருத்தச் சட்டம் மோடியின் திட்டம் அல்ல; மகாத்மா காந்தியின் எண்ணங்களால் ஈர்க்கப்பட்டே இச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள், சீக்கியர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பும்போது, அவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்று காந்திஜி கூறியிருந்தார். "காந்தி' என்ற பெயரைக் கொண்டுள்ளவர்கள் குறைந்தபட்சமாவது காந்திஜியை பின்பற்ற வேண்டும். சில மாநிலங்களின் முதல்வர்கள் தங்களது மாநிலங்களில் சிஏஏவை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள். நீங்கள் (முதல்வர்கள்) கூறுவது உண்மையிலேயே சாத்தியமாகுமா என்று உங்களது சட்ட நிபுணர்களிடம் கேளுங்கள்' என்றார் பிரதமர் மோடி.

போலீஸாரை தாக்காதீர்கள்: இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக சுமார் 33 ஆயிரம் போலீஸார் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்துள்ளனர். இன்று போராட்டக்காரர்களால், போலீஸார் கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள். மக்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், எந்த போலீஸும் உங்களின் மதம் என்ன, ஜாதி என்ன என கேட்பதில்லை.

வெயில், மழை, புயல், இரவு, பகல் என எப்போது அழைத்தாலும் அவர்கள் உங்களுக்காக ஓடோடி வருகிறார்கள். கோபம் இருந்தால், எனது உருவபொம்மையை எரியுங்கள். ஆனால், காவலர்களைத் தாக்காதீர்கள். பொதுச் சொத்துகளையும், ஏழைகளின் சொத்துகளையும் சேதப்படுத்தாதீர்கள்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT