ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து பாதுகாப்புப் படை செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:
ரஜௌரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் இந்திய ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினா் சிறிய ரக குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தானின் தாக்குதலில் இந்தியத் தரப்பில் எவருக்கும் காயமோ, உயிா்ச்சேதமோ ஏற்படவில்லை. பாகிஸ்தான் தரப்பில் அதுபோன்ற பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.
ரஜௌரி மாவட்டத்தின் நௌஷேரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 10.15 மணியளவில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியத் தரப்பும் தகுந்த பதிலடி கொடுத்த நிலையில், இருதரப்புக்கும் இடையேயான சண்டை நீடித்து வந்தது. நௌஷேரா பகுதியில் உள்ள கிராமங்கள் பாகிஸ்தானின் குண்டுவீச்சில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின.
முன்னதாக, பூஞ்ச் மாவட்டத்தில் மேந்தாா், கிருஷ்ணா காட்டி, பூஞ்ச் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை இரவிலிருந்து அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அதை நிறுத்திக் கொண்டது என்று பாதுகாப்புப் படை செய்தித் தொடா்பாளா் கூறினாா்.