இந்தியா

உன்னாவ் பாலியல் வழக்கு: அன்று முதல் இன்று வரை!

16th Dec 2019 06:34 PM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ்வில் இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட உத்தரப் பிரதேச எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை தில்லி நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. மேலும் குல்தீப் செங்கருக்கான தண்டனை விவரம் டிசம்பர் 19-ஆம் தேதி அளிக்கப்படவுள்ளது.

இந்த வழக்கு தொடங்கியது எப்போது? இது எளிதாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதா?

ஜூன் 4, 2017: உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ்வில் பாதிக்கப்பட்ட 17 வயது இளம்பெண் காணாமல் போனார். இதைத் தொடர்ந்து, அவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

ஜூன் 11, 2017: அந்தப் பெண் ஆரய்யா பகுதியில் காணப்பட்டார். அப்போது குல்தீப் செங்கார், அவரது சகோதரர் அதுல் சிங் செங்கார் மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் குற்றம்சாட்டினார். 

ADVERTISEMENT

ஜூன் 12, 2017: ஆள்கடத்தல், திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி கடத்தல் ஆகியக் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஏப்ரல் 3, 2018: குல்தீப் செங்கரின் சகோதரர் அதுல் சிங், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் தந்தையை சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து, இருதரப்பும் பரஸ்பரம் புகார் அளித்தனர். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

ஏப்ரல் 8, 2018: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்தின் முன் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளிக்க முயன்றார். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தனது குடும்பத்தினர் அச்சுறுத்தப்படுவதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டினார். 

ஏப்ரல் 9, 2018: பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் உயிரிழந்தார். அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததாக உடல்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 12, 2018: குல்தீப் செங்கார், அதுல் மற்றும் அவரது கூட்டாளிகள் சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட் 18, 2018: இந்த வழக்கின் முக்கிய சாட்சியான யூனஸ் நீதிமன்றக் காவலில் உயிரிழந்தார். இவரது உடல் உடல்கூறு ஆய்வு செய்யாமலே அடக்கம் செய்யப்பட்டது.

ஜூலை 2, 2019: பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் 19 ஆண்டுகள் பழைய கொலை முயற்சி வழக்கு ஒன்றில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஜூலை 28, 2019: பாதிக்கப்பட்ட பெண், ரே பரலி சிறையில் உள்ள தனது உறவினரை சந்திப்பதற்காக குடும்பத்தினர் மற்றும் வழக்குரைஞருடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது லாரி ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த அவரது உறவினர்களான ஷீலா (50), புஷ்பா (45) ஆகிய இருவர் உயிரிழந்த நிலையில், அந்தப் பெண்ணும், அவரது வழக்குரைஞரும் படுகாயமடைந்தனர்.

ஆகஸ்ட் 5, 2019: லக்னௌ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தில்லி நீதிமன்றத்தில் அன்றாடம் நடைபெற்று வந்தது. 

டிசம்பர் 2, 2019: இந்த வழக்கில் நரேஷ் திவாரி, பிரிஜேஷ் யாதவ், சுபம் சிங் ஆகிய மூவருக்கு எதிராக தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்திய தண்டனையியல் சட்டத்தின் 120பி (குற்றச்சதி), 363 (ஆள்கடத்தல்), 376டி (கூட்டாக சேர்ந்து பாலியல் தாக்குதலில் ஈடுபடுதல்) உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் 'போக்சோ' சட்டப் பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

டிசம்பர் 16, 2019: இந்த வழக்கில் குல்தீப் செங்கார் குற்றவாளி என்று தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உன்னாவ் வழக்கில் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி: தில்லி நீதிமன்றம் தீர்ப்பு

டிசம்பர் 19, 2019: குல்தீப் செங்கருக்கான தண்டனை விவரத்தை தில்லி நீதிமன்றம் அளிக்கிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT