இந்தியா

குடியுரிமை திருத்தச் சட்டம்: உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை!

16th Dec 2019 07:50 PM

ADVERTISEMENT


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், வரும் 18-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க, இது குடியுரிமை திருத்தச் சட்டமானது.

இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வடமாநிலங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்நிலையில், இந்தச் சட்டத்துக்கு எதிராக திரிபுரா மன்னர் வம்சத்தைச் சேர்ந்த திரிபுரா பிரத்யோத் கிஷோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, பிரத்யோத் கிஷோர் மற்றும் காங்கிரஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்தே தலைமையிலான அமர்வு முன் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, இந்த மனுக்கள் வரும் 18-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்தே தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது இதுதொடர்பாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி குறிப்பிட்டார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, திரிபுரா மன்னர் வம்சத்தைச் சேர்ந்த திரிபுரா பிரத்யோத் கிஷோர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், அனைத்து இந்திய அஸ்ஸாம் மாணவர் அமைப்பு என 12-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Tags : Citizenship Amendment Act குடியுரிமை திருத்தச் சட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT