இந்தியா

குடியுரிமை திருத்தச் சட்டம்: வடகிழக்கு மாநிலங்கள் பற்றியெரிவது ஏன்? - அரசியல் அலசல்!

16th Dec 2019 10:01 AM | சுவாமிநாதன்

ADVERTISEMENT


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்  மிகச் சில நாள்களிலேயே விவாதித்து நிறைவேற்றப்பட்டு உடனுக்குடன் குடியரசுத் தலைவரால் ஒப்புதலும் வழங்கப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் பற்றியெரிகின்றன. பிற மாநிலங்களிலும் இதற்குக் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மசோதா மீதான விவாதத்தின்போது, மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்துவது இந்தியாவின் கருத்துக்கு முரணானது என எதிர்க்கட்சிகள் கடுமையான விமரிசனங்களை வைத்தன. 

அதேசமயம் அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இயல்பு நிலை பாதிக்கப்படும் வகையில், இணைய சேவை துண்டிக்கப்பட்டு ஆங்காங்கே ஊரடங்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தலைநகர் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது மாணவா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றமான சூழல் காணப்பட்டது. இதன் காரணமாக தில்லியில் 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது.

இதில் இரண்டு வகையான எதிர்ப்புகள் உள்ளது. இரண்டுமே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான எதிர்ப்புதான். ஆனால், எதிர்ப்புக்கான காரணம் முற்றிலும் வெவ்வேறாகும்.வடகிழக்கு மாநிலங்கள் தங்களது தனித்துவத்தன்மையையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்கப் போராடி வருகின்றன. எதிர்க்கட்சிகள் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்குக் காரணம், இந்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களை மட்டும் தவிர்ப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று. 

எதிர்க்கட்சிகள் மற்றும் நாட்டின் பிறபகுதிகள் எதிர்ப்பதற்கான நோக்கம்:

இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை, தேசியக் குடிமக்கள் பதிவேட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. அஸ்ஸாமில் தேசியக் குடிமக்கள் பதிவேடு பட்டியல் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. அதில், 19 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த தேசியக் குடிமக்கள் பதிவேடு அடுத்தகட்டமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்ற பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில், தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபடும் பல்வேறு மக்கள் இந்த நாட்டின் அடிப்படை உரிமையான குடிமக்கள் என்ற அந்தஸ்தை இழக்க நேரிடும். ஆனால், அப்படிப்பட்ட சூழலில் இருந்து பாதுகாக்கும் அரணாக தற்போது திருத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டம் வந்து நிற்கும்.

2014 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதோர் மட்டுமே இந்தச் சட்டம் மூலம் நிரந்தர குடியுரிமை பெற முடியும். எனவே, இப்படிப்பட்ட சூழலில், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபடும் முஸ்லிம் மக்களின் நிலை கேள்விக்குள்ளாகிறது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம் மக்களுக்கு உதவாது. எனவே, இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.

அதேசமயம், மதத்தின் அடிப்படையில் ஒரு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். இதன் காரணமாகத்தான் இந்தச் சட்டம் தேசத்தின் ஆன்மாவைத் துண்டாடிவிடும் என சோனியா காந்தி விமரிசித்துள்ளார்.

மேலும், இந்தச் சட்டம் மக்கள் மத்தியில் மதத்தின் அடிப்படையில் பிரிவினையை உண்டாக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

மேலும், இந்தச் சட்டம் ஈழத் தமிழர்களுக்கும் எதிரானதாக அமைந்துள்ளது. அண்டை நாடுகளில் இருக்கும் முஸ்லிம் அல்லாத மதத்தினரை ஏற்றுக்கொள்ள முன்வரும் மத்திய அரசு, மற்றொரு அண்டை நாடான இலங்கையில் இருந்து இந்தியாவில் குடியேறும் ஈழத் தமிழர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் என்ற கேள்வியை தமிழக எதிர்க்கட்சி எம்பி-க்கள் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளனர். 

இந்த விமரிசனத்துக்கு, அண்டை நாடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மதச் சிறுபான்மையினருக்கு மட்டுமே நிரந்தரக் குடியுரிமை வழங்குவதற்கு இந்தச் சட்டம் வழிவகுக்கிறது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மக்களுக்கு மட்டும்தான் இந்தியா கம்பளம் விரித்து வரவேற்குமா? அண்டை நாடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் முஸ்லிம் மதத்தினரையோ, தமிழரையோ ஏற்றுக்கொள்வதில் மத்திய அரசுக்கு இருக்கும் சிக்கல் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. மதச்சார்பற்ற ஒரு நாடு மதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எப்படி மக்களை வரவேற்க முடியும்? இதன்மூலம், இந்தச் சட்டத்தின் பிரதான நோக்கம் அண்டை நாட்டு மக்களை வரவேற்பதற்கானதா அல்லது குறிப்பிட்ட ஒரு மதத்தினரைப் பிரித்தாளுவதற்கானதா என்ற யதார்த்த கேள்வி எழுகிறது?  

வடகிழக்கு மாநிலங்கள் எதிர்ப்பதற்கான காரணம் என்ன?

வடகிழக்கு மாநிலங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கான காரணம் முற்றிலும் வேறானது. இந்த திருத்தச் சட்டத்தில் முஸ்லிம் மதத்தினரைச் சேர்த்தாலும் வடகிழக்கு மாநில மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் முற்றிலுமாகவே இந்தச் சட்டத்துக்கு எதிரானவையாகும்.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களுக்கென்று ஒரு தனித்துவம் இருந்து வருகிறது. அங்கு பாரம்பரிய பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் நிறைய உள்ளது. 

எனவே, அண்டை நாட்டில் இருந்து குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அது வடகிழக்கு மாநிலங்களின் தனித்துவத்தன்மையைப் பாதிக்கும் என வடகிழக்கு மக்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே அரசியலமைப்புச் சட்டத்தின் 6-வது அட்டவணையின் கீழ் அஸ்ஸாம், திரிபுரா, மிசோரம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மேலும், நுழை அனுமதிப் படிவம் (இன்னர்-லைன் பெர்மிட்) மூலம் நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம், மிசோரம் ஆகிய பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தவிர, குடியுரிமை திருத்தச் சட்டம் வருவதையொட்டி, மணிப்பூர் மாநிலம் முழுவதும் இந்தப் படிவத்தின் மூலம் பாதுகாக்கப்படும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்தியா - வங்கதேசம் இடையேயான எல்லைப் பகுதி 4,096 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. இதில், 2,216 கிலோ மீட்டர் மட்டுமே மேற்கு வங்க மாநில வரம்புக்குள் வருகிறது. மீதமுள்ள எல்லைப் பகுதிகள் வடகிழக்கு மாநிலங்களுடன் பகிருகிறது.

1971-இல் இந்தியா - பாகிஸ்தான் போரின்போது வங்கதேசத்திலிருந்து லட்சக்கணக்கானோர் அகதிகளாக இந்தியாவின் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நுழைந்தனர். இதையடுத்து, வங்கதேசத்திலிருந்து அஸ்ஸாமில் குடியேறியவர்களுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் எழுந்தது. இதைத்தொடர்ந்து, இந்திரா காந்தி அரசு மாணவர் அமைப்புகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இறுதியில் 1985-இல் ராஜீவ் காந்தி தலைமையிலான அப்போதைய இந்திய அரசு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவதாக அவர்களுக்கு உறுதியளித்தது. இதற்குச் சான்றாக மத்திய அரசு அஸ்ஸாம் ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி, 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவில் குடியேறிய அனைத்து மதத்தினரும் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என அப்போதைய மத்திய அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் 2014 வரை இந்தியாவில் குடியேறியவர்கள் நிரந்தரக் குடியுரிமை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அஸ்ஸாம் ஒப்பந்தத்தில் '1971' என்று நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முரணாக அமைந்துள்ளது. மேலும், அஸ்ஸாம் மக்களின் கலாசாரம், மொழியியல் அடையாளம் மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்தச் சட்டம் அஸ்ஸாம் ஒப்பந்தத்தை மீறும் வகையில் அமைந்துள்ளது.

இதன் காரணமாகவே, அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் மிக வீரியமாக நடைபெற்று வருகிறது.

இந்த எதிர்ப்பு எந்த அளவுக்கு, எவ்வளவு காலத்துக்குத் தொடரும்? தனது நிலையிலிருந்து  மத்திய அரசு இறங்கிவர வாய்ப்பு உண்டா? எதிர்ப்பு ஒருவேளை நீர்த்துப் போய்விடுமா? நிலைப்பாடும் மாறாமல், போராட்டங்களும் வலுவிழந்தால் இந்த மக்களின் கதி என்ன? ஒரு கேள்விக்கும் உடனடியாக விடை தெரியவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT