இந்தியா

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டம் வருத்தமளிக்கிறது: பிரதமர் மோடி

16th Dec 2019 02:42 PM

ADVERTISEMENT


புது தில்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டம் துரதிருஷ்டவசமானது, வருத்தமளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த சட்டத் திருத்தம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த சட்டம் நாட்டின் எந்த மதத்தின் எந்தவொரு குடிமகனையும் பாதிக்காது.  எனவே, இந்த சட்டத் திருத்தம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். விவாதங்கள் நடத்தப்பட்டு, குடியுரிமை சட்ட மசோதா, நாடாளுமன்ற இரு அவைகளிலும் பல அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது நமது நெறிமுறை அல்ல. சொந்த நலன்களுக்காக சில குழுக்கள் நம்மை பிரித்து நமக்குள் இடையூறுகளை உருவாக்க அனுமதிக்க முடியாது என்றும் மோடி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

"இந்த சட்டம் குறித்து எந்த இந்தியருக்கும் கவலைப்பட ஒன்றுமில்லை. இந்தச் சட்டம் பல ஆண்டுகளாக நாட்டுக்கு வெளியே பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்கொண்டவர்களுக்கு, இந்தியாவைத் தவிர வேறு எங்கும் செல்ல முடியாதவர்களுக்கு மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை நிலைநாட்டும் நேரம் இது. தவறான நோக்கத்தோடு பரப்பப்படும் தகவல்கள் மற்றும் புரளிகளில் இருந்து பொதுமக்கள் அனைவரும் தள்ளி நிற்க வேண்டும் என்பதுவே எனது அன்பான வேண்டுகோள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT