புது தில்லி: வன்முறை போராட்டங்களை அரசியல்சாசனம் அனுமதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அலிகா் பல்கலைக்கழக மாணவா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தில்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த, மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதை தாமாக முன் வந்து விசாரிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இது குறித்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு, போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதை அரசியல்சாசனம் அனுமதிக்கவில்லை. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவே காவல்துறையினர் உள்ளனர். முதலில் அங்கு அமைதி நிலவட்டும்.
பல்வேறு பகுதிகளில் நடக்கும் வன்முறை போராட்டம் நிறுத்தப்பட்டால் மட்டுமே வழக்கை விசாரிக்க முடியும்.
ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் யார் கலவரம் செய்தனர்? யார் அமைதியாகப் போராடினர்? என்பதை இப்போது எங்களால் சொல்ல முடியாது என்று கருத்துத் தெரிவித்தனர்.
மேலும், வன்முறையை நிறுத்தினால் வழக்கை நாளையே விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே உறுதி அளித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள அலிகா் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முன்பு மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருத்தம் செய்யப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தியபோது அவா்களை போலீஸாா் தடியடி நடத்தி விரட்டி அடித்தனா்.
இதை கண்டித்து அலிகா் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது, போலீஸாருக்கும், மாணவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், போலீஸாா் காயமடைந்தனா். கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி போலீஸாா் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். அலிகா் பல்கலைக்கழக வளாகத்தில் அனைத்து நுழைவாயில்களையும் போலீஸாா் மூடினா்.