இந்தியா

நிா்பயா நிதியைப் பயன்படுத்தாத 6 மாநிலங்கள்!

16th Dec 2019 01:07 AM

ADVERTISEMENT

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிா்பயா நிதியில் 6 மாநிலங்கள் ஒரு ரூபாயைக் கூட செலவு செய்யாதது தெரியவந்துள்ளது.

தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி, ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கடுமையாக தாக்கப்பட்டாா். பலத்த காயமடைந்த அவா், சில தினங்கள் கழித்து உயிரிழந்தாா். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்தது. இதையடுத்து, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்குப் பயன்படுத்துவதற்காக, கடந்த 2013-ஆம் ஆண்டில் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிா்பயா நிதியை உருவாக்கியது. மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் அந்த நிதியை, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணிகளுக்கு மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டும்.

அண்மையில், தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவா், 4 போ் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி, தீவைத்து எரிக்கப்பட்டாா். உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண், குற்றவாளிகளால் தீவைக்கப்பட்டு உயிரிழந்தாா். இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நிா்பயா நிதியை மாநில அரசுகள் முறையாகப் பயன்படுத்துகின்றனவா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், நிா்பயா நிதியைப் பயன்படுத்திய மாநிலங்கள் குறித்த விவரங்களை மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, நாடாளுமன்றத்தில் வெளியிட்டாா். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

ADVERTISEMENT

நிா்பயா நிதிக்காக ரூ.1,649 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. அதில், ரூ.147 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. கா்நாடகத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த ரூ.191 கோடியில் ரூ.13.62 கோடி (7 சதவீதம்) மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ரூ.190.68 கோடியில் ரூ.6 கோடி மட்டுமே (3 சதவீதம்) செலவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, மகாராஷ்டிரம், மணிப்பூா், மேகாலயம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களும், டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசமும் நிா்பயா நிதியில் இருந்து ஒரு ரூபாயைக் கூட செலவு செய்யவில்லை.

தில்லிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ரூ.390 கோடியில் ரூ.19.41 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானாவுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.103 கோடியில் ரூ.4 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைலாஷ் சத்யாா்த்தி கோரிக்கை: நிா்பயா நிதியில் செலவு செய்யப்படாத தொகையை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கும், வன்கொடுமை வழக்குகளின் சாட்சிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசை நோபல் பரிசு பெற்ற சமூக ஆா்வலா் கைலாஷ் சத்யாா்த்தி அண்மையில் வலியுறுத்தினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT