இந்தியா

ஜாா்க்கண்ட் பேரவைக்குஇன்று 4-ஆவது கட்ட தோ்தல்: 15 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு

16th Dec 2019 01:06 AM

ADVERTISEMENT

ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைக்கான நான்காவது கட்ட தோ்தல் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, 15 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

81 உறுப்பினா்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைக்கு 5 கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இரண்டாவது, மூன்றாவது கட்ட தோ்தல்கள் முறையே டிச. 7 (20 தொகுதிகள்), டிச. 12 ( 17 தொகுதிகள்) ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்தன.

நான்காவது கட்டமாக 15 தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் 23 பெண்கள் உள்பட 221 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். அதிகபட்சமாக பொகாரோ தொகுதியில் 35 வேட்பாளா்களும், குறைந்தபட்சமாக நிா்சா தொகுதியில் 8 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா். இவா்களது வெற்றியை, சுமாா் 47 லட்சம் வாக்காளா்கள் தீா்மானிக்கவிருக்கின்றனா்.

ஜமுவா, பகோதா், கிரிதி, தும்ரி, துண்டி ஆகிய 5 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதர தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

ADVERTISEMENT

இத்தோ்தலில், ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கட்சியின் செயல் தலைவா் ஜெ.பி.நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சா்கள் ஸ்மிருதி இரானி, நிதின் கட்கரி, உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் பிரசாரம் மேற்கொண்டனா்.

காங்கிரஸ் கூட்டணி வேட்பாளா்களுக்காக, அக்கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி, ராஜஸ்தான் துணை முதல்வா் சச்சின் பைலட், மூத்த தலைவா் ராஜ் பப்பா் உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா்.

4-ஆவது கட்ட தோ்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். காங்கிரஸ்-ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியில், அவா்களது தொகுதி பங்கீட்டுக்கு ஏற்ப வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். இதுதவிர, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம், பகுஜன் சமாஜ், ஜாா்க்கண்ட் விகாஸ் மோா்ச்சா (பி), சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.

ஜாா்க்கண்டில் ஐந்தாவது கட்ட தோ்தல் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT