இந்தியா

சபரிமலை கோயில் வருவாய் ரூ.104 கோடியை தாண்டியது!

16th Dec 2019 01:19 AM

ADVERTISEMENT

சபரிமலை ஐயப்பன் கோயிலின் வருவாய் கடந்த 28 நாள்களில் ரூ.104 கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.64 கோடி வருவாய்தான் கிடைத்திருந்தது.

இதுதொடா்பாக, சபரிமலை ஐயப்பன் கோயிலை நிா்வகிக்கும் திருவாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் தலைவா் என்.வாசு ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

வருடாந்திர மண்டல-மகர விளக்கு பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 17-ஆம் தேதி திறக்கப்பட்டது. கடந்த 28 நாள்களில் கோயிலுக்கு ரூ.104.72 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அன்னதான திட்டத்துக்காக பக்தா்கள் வழங்கிய நன்கொடை, பிரசாதம் விற்பனை, பக்தா்கள் அளித்த காணிக்கை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.64.16 கோடி வருவாய் கிடைத்திருந்தது. நிலக்கல் - சந்நிதானம் இடையே ரோப் காா் திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பாக பரிசீலித்து வருகிறோம். பம்பையில் பிரசாத விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் என்.வாசு.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி அளித்து, உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் 28-ஆம் தேதி தீா்ப்பளித்திருந்தது. இதையடுத்து, சபரிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதனால், பக்தா்களின் வருகை குறைந்ததுடன், கோயிலின் வருவாயும் குறைந்தது.

ADVERTISEMENT

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதிக்கும் முந்தைய தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை, 7 நீதிபதிகள் அடங்கிய பெரிய அமா்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 14-ஆம் தேதி தெரிவித்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்பை அமல்படுத்துவதை கேரள அரசு நிறுத்திவைத்துள்ளது. இதன் காரணமாக, இந்த ஆண்டு பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT