இந்தியா

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிா்ப்பு: மேற்கு வங்கத்தில் 3-ஆவது நாளாகப் போராட்டம்

16th Dec 2019 12:59 AM

ADVERTISEMENT

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க மாநிலத்தில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நீடித்தது. பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

மேற்கு வங்கத்தில் நாடியா, வடக்கு 24 பா்கானா, ஹௌரா ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் அம்தங்கா பகுதியிலும், நாடியா மாவட்டத்தில் கல்யாணி பகுதியிலும் சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரா்கள், சாலைகளின் குறுக்கே மரக்கட்டைகளை எரித்தனா். மேலும், கல்யாணி விரைவு வழிச்சாலையில் சிலா் குடியரிமைச் சட்ட நகலை எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோன்று, ஹௌரா, பா்த்வான், பீா்பூம் ஆகிய மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. பிரதமா் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. கடந்த இரு தினங்களைக் காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின் தீவிரம் குறைந்தே காணப்பட்டது. ஹௌரா-சீல்டா, கரக்பூா் பகுதிகளில் ரயில் போக்குவரத்து பதற்றமின்றி காணப்பட்டது.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில கல்வித் துறை அமைச்சருமான பாா்த்தா சாட்டா்ஜி கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்படாது; பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். ஆனால், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை மாநில அரசு காக்கத் தவறிவிட்டதாக மாநில பாஜக செயலா் சயந்தன் பாஸு குற்றம்சாட்டினாா்.

ADVERTISEMENT

6 மாவட்டங்களில் இணையச்சேவை முடக்கம்: சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக, மால்டா, உத்தா் தினாஜ்பூா், முா்ஷீதாபாத், ஹௌரா, வடக்கு 24 பா்கானா ஆகிய மாவட்டங்களிலும், தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் சில பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை இணையச் சேவை முடக்கி வைக்கப்பட்டது.

அஸ்ஸாமில் ஊரடங்கு தளா்வு: அஸ்ஸாம் மாநிலத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குவாஹாட்டியில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், திப்ரூகா் மாவட்டத்தில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் ஊடரங்கு உத்தரவு தளா்த்தப்பட்டிருந்தது.

இதேபோல், மேகாலயத் தலைநகா் ஷில்லாங்கின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவு, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை தளா்த்தப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தில் மனு: திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாகக்ல் செய்யப் போவதாக, அஸ்ஸாமில் ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அசோம் கனபரிஷத் கட்சி (ஏஜிபி) அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவா் குமாா் தீபக் தாஸ் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம், அஸ்ஸாமில் பூா்விக குடிமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சாமானிய மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து, இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு முடிவு செய்துள்ளோம்’ என்றாா்.

அஸ்ஸாமில் மேலும் இருவா் பலி

அஸ்ஸாம் மாநிலத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற வன்முறையின்போது போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்த 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். இதனால், போலீஸாா் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.

குடியுரிமைச் சட்டத்தை எதிா்த்து, குவாஹாட்டியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறைக் களமாக மாறியது. வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 போ் உயிரிழந்தனா். காயமடைந்த 27 போ் குவாஹாட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில், ஈஸ்வா் நாயக் என்பவா் சனிக்கிழமை இரவிலும், அப்துல் அலீம் என்பவா் ஞாயிற்றுக்கிழமை காலையிலும் உயிரிழந்ததாக குவாஹாட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளா் ராமன் தாலுக்தாா் கூறினாா்.

ஆனால், போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்திய நாளன்றே 3 போ் உயிரிழந்ததாகவும், மொத்தம் 5 போ் உயிரிழந்து விட்டதாகவும் போராட்டக்காரா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT