இந்தியா

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: சித்தராமையாவின் ராஜிநாமாவை நிராகரிக்க காங்கிரஸ் பரிசீலனை

16th Dec 2019 03:17 AM

ADVERTISEMENT

கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்து சித்தராமையா அளித்த கடிதத்தை நிராகரிப்பதற்கு காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது.
 கர்நாடக சட்டப்பேரவையில் காலியாக இருந்த 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதற்கு தார்மிக பொறுப்பேற்று, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை சித்தராமையா கடந்த 9}ஆம் தேதி ராஜிநாமா செய்தார். அதேபோல, காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும் ராஜிநாமா செய்திருந்தார். இவர்களின் ராஜிநாமாவுக்குப் பிறகு கர்நாடக காங்கிரஸில் குழப்பமான சூழ்நிலை உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவர், காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவிகளை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜி.பரமேஸ்வர், டி.கே.சிவகுமார், எஸ்.ஆர்.பாட்டீல், எச்.கே.பாட்டீல், கே.எச்.முனியப்பா, எம்.பி.பாட்டீல் போன்றவர்கள் தில்லியில் முகாமிட்டு முயற்சித்து வருகிறார்கள்.
 இந்நிலையில், கடந்த 5 நாள்களாக மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பெற்று வந்த சித்தராமையாவை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளனர்.
 இதை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த சித்தராமையாவின் முடிவை கட்சி மேலிடம் நிராகரிக்கும் என்ற கருத்து மேலெழுந்துள்ளது.
 அந்தப் பதவியில் சித்தராமையாவே தொடர, கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். எனினும், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவராக வேறொருவரை நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
 காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவராகப் பதவி வகிப்பவரே எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து வருகிறார்கள். ஆனால், இந்தப் பதவிகளைத் தனித்தனியாக பிரித்து இருவருக்கு பொறுப்பை பகிர்ந்தளிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் மேலிடமும் பரிசீலித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 ஒருவேளை இந்த இரு பதவிகளையும் சித்தராமையாவுக்கு அளித்தாலும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் பொறுப்பை புதியவருக்கு அளிக்க கட்சி மேலிடம் யோசித்து வருகிறது. மாநிலத் தலைவராக டி.கே.சிவகுமார் நியமிக்கப்படலாம் என்று கருத்து நிலவுகிறது. கே.எச்.முனியப்பா, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் இப்பதவிக்காக முயற்சித்து வருகிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT