திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ. 2.92 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி, சனிக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 2.92 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ. 32 லட்சம் நன்கொடை: திருப்பதி ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். சனிக்கிழமை அன்ன தான அறக்கட்டளைக்கு ரூ. 8 லட்சம், கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ. 21 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், கல்வி தான அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 32 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
நாளை முதல் திருப்பாவை பாராயணம்
திருமலையில் செவ்வாய்க்கிழமை முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு, திருப்பாவை பாராயணம் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 30 நாள்களும் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை (டிச. 17), மார்கழி மாதம் தொடங்க உள்ளதால், அன்று முதல் வரும் ஜன. 14-ஆம் தேதி வரை காலை 3 மணிக்கு சுப்ரபாதத்துக்கு பதிலாக திருப்பாவை பாராயணம் செய்யப்படும். அதனால் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பாவை சேவை ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மடப்பள்ளி ஊழியர்கள் ஓய்வெடுக்க புதிய வளாகம் திறப்பு
திருமலையில் உள்ள மடப்பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வெடுக்க தேவஸ்தானம் புதிய வளாகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்தது.
திருமலையில் உள்ள மடப்பள்ளிகளில் தினசரி பல ஆயிரம் கிலோ அளவில் லட்டு பிரசாதமும், பக்தர்களுக்கான உணவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்காக கோயிலுக்குள் அன்ன பிரசாத மடப்பள்ளியும், கோயிலுக்கு வெளியில் பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளியும் செயல்பட்டு வருகின்றன. இதில், 24 மணிநேரமும் சுழற்சி முறையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் மடப்பள்ளி வேலை முடிந்து ஓய்வெடுக்க கோவிந்த நிலையம், அஷ்ட விநாயக், வகுளமாதா உள்ளிட்ட ஓய்வறை வளாகங்களைப் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், அவர்கள் தங்களுக்கு ஓய்வெடுக்க தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று தேவஸ்தானத்திடம் வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதை ஏற்ற தேவஸ்தானம், திருமலையில் கௌஸ்துபம் அருகில் உள்ள எஃப் டைப் குடியிருப்பில் உள்ள 3 கட்டடங்களை ரூ. 7 கோடி செலவில் புதுப்பித்து, மகாலட்சுமி நிலையம் எனப் பெயரிட்டு அவர்களுக்கு அளித்துள்ளது. அதில், 75 அறைகள் உள்ளன.
அவற்றில் 2 அலுவலகமாகவும், ஒன்று உணவருந்தும் இடமாகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மகாலட்சுமி நிலையத்தை தேவஸ்தான கோயில் இணை அதிகாரி ஹரேந்திரநாத் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
85,621 பேர் தரிசனம்
திருப்பதி ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 85,621 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 41,984 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளை கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். தர்ம தரினத்தில் 10 முதல் 12 மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்.
ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பினர்.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 10,278 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 5,926 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 19,156 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 3,087 பக்தர்களும், கபில்தீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் 3,917 பக்தர்களும் சனிக்கிழமை முழுவதும் தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
சோதனைச் சாவடி விவரம்: அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் சனிக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 1,00,107 பயணிகள் இச்சாவடியைக் கடந்துள்ளனர்.
11,228 வாகனங்கள் இதைக் கடந்து சென்றுள்ளது. அதன் மூலம் ரூ.2.52 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10,800 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.