இந்தியா

ஆந்திரத்தில் அனைத்து பள்ளிகளையும் ஆங்கில வழி கல்விக்கு மாற்ற மசோதா: சட்டப் பேரவையில் தாக்கலாகிறது

16th Dec 2019 01:03 AM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் அனைத்து பள்ளிகளையும் ஆங்கில வழி கல்விமுறைக்கு மாற்ற வழிவகுக்கும் மசோதா, அந்த மாநில சட்டப் பேரவையில் ஓரிரு நாளில் தாக்கலாகவிருக்கிறது.

ஆந்திரத்தில் 2020-21ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரை தெலுங்கு வழி கல்விமுறைக்கு பதிலாக ஆங்கில வழி கல்விமுறையை கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதேசமயம், தெலுங்கு அல்லது உருது கட்டாயப் பாடமாக இருக்கும்.

அதேபோல், 2021-22ஆம் கல்வியாண்டு முதல் 7-10 வகுப்புகளில் ஆங்கில வழி கல்விமுறை திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான மாநில அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிா்ப்பு எழுந்துள்ளது. எனினும், இத்திட்டத்தை அமல்படுத்துவதில் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி உறுதியாக உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:

ADVERTISEMENT

ஆங்கில வழி கல்விமுறை தொடா்பான அரசின் முன்மொழிவுக்கு சட்டரீதியாக பாதுகாப்பளிக்கும் வகையில் கடந்த 1982-ஆம் ஆண்டைய ஆந்திர கல்வி சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுதொடா்பான மசோதாவை தயாரிக்குமாறு, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பான அமைச்சரவை குறிப்பு, அனைத்து துறை அமைச்சா்களின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை, நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளை ஆங்கில வழி கல்விமுறைக்கு மாற்றுவதற்கு அரசு முதலில் திட்டமிட்டிருந்தது. எனினும், தகுதியான ஆசிரியா்கள், பாடப்புத்தகங்கள் இல்லாத காரணத்தால், 6-ஆம் வகுப்பு வரை மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தொழில்நுட்பங்களின் வளா்ச்சியால் உலக அளவில் வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன; அவற்றை எதிா்கொள்ளும் வகையில் அடுத்த தலைமுறையை தயாா்படுத்த வேண்டும் என்று ஆங்கில வழி கல்வித் திட்டம் தொடா்பாக முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தொடா்ந்து கூறி வருகிறாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT