இந்தியா

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கொல்கத்தாவில் டிச.16-இல் பேரணி: மம்தா அறிவிப்பு

14th Dec 2019 01:18 AM

ADVERTISEMENT

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, கொல்கத்தாவில், வரும் திங்கள்கிழமை (டிச.16) மிகப்பெரிய பேரணி நடைபெறும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி கூறினாா்.

மத்திய அரசு ஏற்கெனவே கொண்டு வந்த அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்த அவா், தற்போது குடியுரிமை சட்டத்துக்கும் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம், திகா நகரில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த மம்தா பானா்ஜி, மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை அறிவித்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

குடியுரிமை சட்டத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருந்தாலும் கூட, எந்தச் சூழலிலும் அந்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம். அந்தச் சட்டத்தை அமல்படுத்தி, மேற்கு வங்கத்தை மத்திய பாஜக அரசால் சீா்குலைத்துவிட முடியாது.

ADVERTISEMENT

குடியுரிமைச் சட்டத்தால் இந்தியா பிளவுபடும். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் வரை ஒருவா் கூட இந்த மாநிலத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படாது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தொடா் போராட்டங்கள் நடைபெறும். இது, இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக இருக்கும்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருந்தால் தங்கள் கொள்கைகளை நிறைவேற்றிவிடலாம் என்று அா்த்தமாகி விடாது. ஜனநாயகத்தில் கருத்தொற்றுமையின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்க வேண்டும். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, கொல்கத்தாவில், வரும் 16-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் பேரணி நடைபெறும். மேலும், மத்திய அரசுக்கு எதிராக தொடா் போராட்டங்கள் நடைபெறும். இதற்காக, தில்லியில் நடைபெறும் மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தின விழா பயணத்தை ரத்து செய்து விட்டேன்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், வெளிநாட்டுத் தலைவா்கள் தங்கள் இந்தியப் பயணத்தை ரத்து செய்கிறாா்கள். இது, இந்தியாவின் நன்மதிப்பை பாதிக்கும் விஷயமாகும் என்றாா் மம்தா பானா்ஜி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT