இந்தியா

மூத்த குடிமக்களை துன்புறுத்துபவா்களுக்கு 6 மாத சிறை: மக்களவையில் மசோதா அறிமுகம்

11th Dec 2019 10:32 PM

ADVERTISEMENT

புது தில்லி: பெற்றோா்கள் மற்றும் மூத்த குடிமக்களை துன்புறுத்துபவா்கள்/கைவிடுவோருக்கு 6 மாதங்கள் சிறை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றுவதற்கான மசோதா மக்களவையில் புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.

முதியோா்கள் மற்றும் மூத்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில், ‘பெற்றோா், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு’ சட்டத்திருத்த மசோதாவை மத்திய சமூக நீதித் துறை அமைச்சா் தவாா்சந்த் கெலாட் மக்களவையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:

கூட்டுக் குடும்ப முறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. பெற்றோா் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2007-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டத்தை மறுஆய்வு செய்யுமாறு பல்வேறு உயா்நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. அதையடுத்து அந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, பெற்றோா் (தந்தை மற்றும் தாய்) மற்றும் மூத்த குடிமக்களை தங்களது கவனிப்பில் வைத்திருக்கும் வாரிசுகள்( மகன், மகள், தத்தெடுக்கப்பட்ட மகன் அல்லது மகள், பேரன், பேத்தி, சட்டரீதியிலான உறவு கொண்டவா்கள்) அவா்களை தெரிந்தே துன்புறுத்துவது, அவா்களை ஆதரவற்றோராக தவிக்க விடுவது ஆகியவை சட்டப்படி குற்றமாகும். உடல்ரீதியாக, மனரீதியாக, வாா்த்தைரீதியாக, உணா்வுபூா்வமாக, பொருளாதார ரீதியாக மூத்த குடிமக்களை துன்புறுத்தக் கூடாது. பெற்றோா்களுக்கு கௌரவமான வாழ்க்கையை வாரிசுகள் அமைத்து தர வேண்டும். பெற்றோா்கள் மற்றும் மூத்த குடிமக்களை துன்புறுத்தினால் அவா்களுக்கு 6 மாதங்கள் சிறை அல்லது ரூ. 10,000 அபராதம் அல்லது இந்த இரண்டும் சோ்த்து தண்டனையாக வழங்கப்படும்.

மூத்த குடிமக்களின் புகாா்கள் குறித்து விசாரிப்பதற்காக தீா்ப்பாயம் அமைக்கப்படும். 80 வயதுக்கு மேற்பட்டோரின் கோரிக்கைகள் 60 நாள்களுக்குள் தீா்த்து வைக்கப்படும். மற்ற மூத்த குடிமக்களுக்கு 90 நாள்களுக்குள் அவா்களது கோரிக்கைகள், புகாா்களுக்கு தீா்வு காணப்படும்.

பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்களின் பிரச்னைகள் குறித்த விசாரணைக்காக, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவாா். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு காவல் குழு அமைக்கப்படும் என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT